19 Oct 2012

சமுத்திரவியல் பாடநெறிகள் எமது நாட்டில் இல்லை கிழக்கு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறைத் தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிப்பு.

SHARE


மட்டக்களகப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்த சம்பவமானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என கிழக்கு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறைத் தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிக்கின்றார்.

நேற்று முன்தினமிருந்து காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் சூரை, கீரி, கூடை, பாரை, உட்பட குறித்த சில மீன் இனங்கள் எதிர்பாராத வகையில் கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என கிழக்கு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறைத் தலைவர் கலாநிதி பெ.வினோபாவாவிடம் கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் அது பற்றி மேலும் தெரிவிக்கையில்.

“கடலில் குளிரான பகுதியில் நடமாடும் குறித்த மீன் இனங்கள் காலநிலை மாற்றம் காரணமாகவே கரையை நோக்கி நகர்ந்திருக்கலாம். அதாவது கரையோரத்தை நோக்கிய பகுதிகளில் வெப்பநிலை குறைந்த நீரோட்டங்;கள் வந்ததால் இந்த நிலமை ஏற்பட்டிருக்கலாம். இது காலநிலை மாற்றத்தினுடாக நிகழும் சில மாற்றங்கள் ஆகும்.

இந்த மாற்றங்களை அறிந்து கொள்ள அவுஸ்ரேலியாவிலுள்ள பேத் பல்கலைக் கழகத்திலுள்ளது போன்று எமது நாட்டில் இல்லை. சமுத்திரவியல் பாடநெறிகள் எமது நாட்டில் இல்லாதநிலையில் சமுத்திரத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

சமுத்திரவியல் பாடநெறிகள் இருக்குமானால் சமுத்திரத்தில் இப்படியான மாற்றங்கள் நிகழும் போது அடுத்தது என்ன நடக்கும் அதாவது மழை பெய்யுமா? வெள்ள அனர்த்தம் ஏற்படுமா? ஏன்பதை முன்கூட்டியே அறியக் கூடியதாக இருக்கும்.

மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வருவது என்பது புதிய விடயம் அல்ல. சில காலப்பகுதியில் குறிப்பாக மழை வீழ்ச்சி கூடிய பருவப் பெயர்ச்சி காலங்களில் கிழக்கு கரையோரத்தில் பல பகுதிகளில் நடைபெறுவது வழமை ஆனால் இம்முறை சில சமயம் கூடுதலாக வந்திருக்கலாம்.

இந்த மீன்களை உண்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. சில சமயம் பாதிப்பு இருக்கும் என்று கருதினால் உயிரியல் இரசாயணவியல் பரிசோதனை மூலம்தான் பரிசோதிக்க முடியும். ஆனால் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தை பொறுத்தவரை இந்த மீன்களை உண்பதால் பாதிப்பு ஏற்படும் என கருத முடியாது. காரணம் காலநிலை மாற்றம் காரணமாக மீன்கள் தாங்கள் வாழும் சூழலை நோக்கி நகர்துள்ளதே தவிர வேறு காரணங்கள் இல்லை” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: