30 Nov 2022

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள் - பா.உ. ஜனா சபையில் காட்டம்.

SHARE

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள் - பா.உ. ஜனா சபையில் காட்டம்.

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்   (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவும் தற்போதைய ஜனாதிபதியும் தெரிவித்த மாவட்ட அவிவிருத்தி சபை குறித்த கருத்து தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் இந்த சபையில் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும், குறிப்பாக தமிழ் மக்களையும் வேதனைப்படுத்தும் ஒரு கருத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.  தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கடந்த சில அமர்வுகளுக்கு முன்பு அனைவரையுமே இந்த சபையில் எழுப்பி இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு நீங்கள் எல்லாம் தயாரா என்று கேட்டது மாத்திரமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை எழுந்து 13 பிளஸ் என்று கூறுங்கள் என்று கூறிய ஜனாதிபதி மாவட்ட சபைகளைப் பற்றி பிரஸ்த்தாபித்திருப்பது மிகவும் வேதனையான விடயம்.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வருவது யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சம்பவம் தான். அந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலையும் அந்த அதிகாரப்பரவலாக்கத்தையும் என்றோ இந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

உங்களுக்குத் தேவையென்றால், தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்குமென்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: