28 Oct 2021

மரங்களுக்கூடாக மத நல்லிணக்கம் மட்டக்களப்பில் திட்டம் அமுல்.

SHARE

மரங்களுக்கூடாக மத நல்லிணக்கம் மட்டக்களப்பில் திட்டம் அமுல்.

இன மத பேதமின்றி கனி தரும் நீண்டகால மரங்களை வளர்ப்பதனூடாக மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மட்டக்களப்பு கரித்தாஸ் மற்றும் எஹெட் நிறுவனங்களின் பல் சமய ஒன்றிய அமைப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதலாம் கட்ட நிகழ்வு புதன்கிழமை 27.10.2021 ஏறாவூர் செங்கலடி பிரதேசங்களிலுள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலும் இந்து கிறிஸ்தவ றோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மாணவர்கள் கற்கும் பாடசாலை வளாகங்களிலும் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மத வழிபாட்டுத் தல வளாகங்களிலும் நாட்டுவதற்குத் தேவையான நீண்ட கால கனி வர்க்க மரங்களான மா பலா கொய்யா மாதுளை போன்ற மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கனிவர்க்க மரக்கன்றுகளை விநியோகித்து வைத்து உரையாற்றிய பல் சமய ஒன்றிய அமைப்பின் இணைப்பாளர் எஸ். கமல் எஹெட் கரித்தாஸ் நிறுவனம் பல் சமய ஒன்றியத்தை உருவாக்கி இன ஐக்கிய சகவாழ்வு முறையை ஊக்குவிப்பதற்கான செயற் திட்டங்களை அமுலாக்கி வருகின்றது.

அந்த வகையில் சமகால கொரோனா வைரஸ் பரவல் தொற்றுக் காலத்தின்போது ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உலக மக்கள் உழலவேண்டியேற்பட்டது.

மனிதர்கள் சுவாசிக்க ஒட்சிசனை வழங்குவதும் இயற்கையைப் பேணி உலகத்தை உயிர்வாழ வைப்பதும் மரங்கள் என்றபடியால் இன மத பேதமின்றி அனைவரும் இணைந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.

இயற்கை இன மதபேதமின்றி மனிதர்களை வாழ வைக்கும் ஒரு அருட்கொடையாகும் அதனை இன மத பேதமின்றி அனைவரும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பல் சமய ஒன்றியத்துக்கான திட்ட இணைப்பாளர் எஸ். மைக்கல் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய சமயப் பெரியார்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பல் சமய ஒன்றிய செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 












                                                                               

SHARE

Author: verified_user

0 Comments: