22 May 2021

கொழும்புத் துறைமுக நகரம் இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடையாகும் - சந்திரகுமார்.

SHARE

கொழும்புத் துறைமுக நகரம்  இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடையாகும் - சந்திரகுமார்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் உள்ளுர் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்கிராமங்களில் உற்பத்தி செய்யும் உற்பத்திகளுக்கும் சந்தை வாய்ப்புக்களும், ஏற்றுமதிகளுக்குரிய வாய்ப்புக்களும், அதிகளவு உள்ளன. இதன்மூலம் அதிகளவு வருமானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கொழும்புத் துறைமுக நகர திட்டம் இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடையாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தூள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு உள்ளக வீதி புணரமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(21) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு வீதிக்கான அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

கடந்த தேர்தல் பிரசார காலங்களில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறும் என நாம் மக்களிடத்தில் எடுத்துக் கூறியிருந்தோம் அதுபோல் தற்போது எமது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள பெரியகல்லாறு உள்ளக வீதி 70 மில்லியன் ஒதுக்கீட்டில் புணரமைப்புச் செய்வதற்குரிய வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பட்டிருப்புத் தொகுதியில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்படும். கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 19 கோடி ரூபா நிதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆனாலும் இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது எதுவும் கிடையாது. இந்த பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு நாடாளுமன்றம் சென்றவர்கள் அங்கு சென்று மக்களுக்கு என்ன தேவை என்று எதுவும் கதைக்காமல் முஸ்லிங்களின் வியாபாரம் தடைப்படும், என்று பிரசாரம் செய்கின்றார்கள். தமிழர்களுக்கு என்ன தேவை, தமிழர்களை எவ்வாறு முன்னேற்றலாம் என்று பேசாமல் வருகின்ற அபிவிருத்திகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் மேற்கொள்ளும் தேவையில்லாத பிரசாரங்களால் அபிவிருத்திகள் தடைப்படுகின்றன.

கல்வி ஆறு என பெயர்பெற்ற இந்தக் கல்லாறு கிராமத்திற்கு முதன் முதலாக அபிவிருத்தித்திட்டத்தை ஆரத்பித்து வைப்பதையிட்டு சந்தோசமடைகின்றோம். அதுபோல் இம்மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்றவர்கள் எமது மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கத்திடமிருந்த கேட்டுப் பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும், எமது அபிவிருத்திகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தாமல் எம்மோடு பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது போன்று இம்மாவட்டத்தைச் சேர்ந்த தனவந்தர்கள், ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் முதலீடுகளைச் செய்து அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது இலங்கையில் அமைக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் உள்ளுர் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்,  கிராமங்களில் உற்பத்தி செய்யும் உற்பத்திகளுக்கும் சந்தை வாய்ப்புக்களும், ஏற்றுமதிகளுக்குரிய வாய்ப்புக்களும், அதிகளவு சந்தர்ப்பங்கள் உள்ளன. இதன்மூலம் அதிகளவு வருமானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கொழும்புத் துறைமுக நகர திட்டம் இலங்கைக்குக் கிடைத்த பாரியதொரு கொடையாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: