8 Mar 2021

கறுப்புப் புள்ளி அகன்று விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

SHARE

கறுப்புப் புள்ளி அகன்று விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் மனதில் கறுப்புப் புள்ளியாக பதியப்பட்டிருந்த விடயம்  முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எனவே இதில் ஒரு அங்கமாக சிறுபான்மையினரான முஸ்லிம்கள் எவ்வாறு ஒரு பெரும்பான்மையினத்துடன் வாழ்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மரணித்தவர்கள் எனக் கூறப்படும் ஜனாஸாக்களின் நல்லடக்கத்திற்கு மட்டக்களப்பு பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக திங்கட்கிழமை (08) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர் நாங்கள் சாணக்கியமான அணுகுமுறைகளை மேற்கொண்டு எற்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

விடாப்பிடியான அல்லது தீவிரவாத போக்குகளை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கின்ற ஒரு புதுவிதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதைப்பற்றி சிறுபான்மையினர் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

சிறுபான்மையினக்கெதிரான கெடுபிடிகளை நெருக்கடிகளை புறக்கணிப்புக்களை எப்படி வெல்வது அல்லது தோற்கடிப்பது என்பதுபற்றி அவசியம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு காய்நகர்த்தல்களைச் செய்து நாங்கள் இவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

எனது அரசியல் வாழ்க்கையில் கடந்த நான்கு மாதங்கள் மிகவும் கனதி மிக்கதாக இருந்தது.

அரசியல் யாப்பின் இருபதுக்கு வாக்களித்தமை மற்றும் கொரோனா வைரஸ் மரணங்களில் முஸ்லிம்களின் ஜளாஸா எரிப்பு விவகாரம் என்பன பேசுபொருளாகி விட்டது. அதனை வைத்தே அரசியல் அறிவில்லாத உலுத்தர்கள் அரசியல் செய்யத் தொடங்கி விட்டார்கள்

நாங்கள் உறக்கமின்றி ஓடித் திரிந்து அடிமட்டத்திலிருந்து அதிகாரத்தின் அதியுயர் மட்டம் வரை தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தோம்.

வெள்ளிக்கிழைம ஜனாஸா அடக்கப்பட்ட இடத்தைக் கூட கடந்த டிசெம்பெர் மாதம் நாங்கள்தான் அரசாங்கத்துக்கு தெரிவு செய்து கொடுத்திருந்தோம்.

இவையெல்லாம் திரை மறைவில் அழுத்தமாக ஆதாரமாக நுணுக்கமாக காய்நகர்த்தி அரசின் அனுசரணையோடு மேற்கொண்ட நடவடிக்கைகள். இவற்றுக்கான எழுத்து மூலமான ஆதாரங்கள் எம்ம்pடமுள்ளன.

எனவே இதில் வீணர்களின் கொக்கரிப்புக்களை நாங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

இரணை தீவு இல்லையென்றாகி அடுத்து என்ன நடக்கும் என்பதற்குள்ளாகவே நாம் இங்கு ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்துவிட்டோம்.

ஆனால் இந்தக் காரியங்கள் ஒரே இரவில் நடந்தேறவில்லை. அதிகாரிகள் சகிதம் எத்தனையோ கள ஆய்வுகள் மேற்கொண்டு நிபுணர்களின் அறிக்கைகளைப் பெற்று கூட்டங்கள் கூடி முடிவெடுக்கப்பட்டதன் பின்னர்தான் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடிந்தது.

எனவே நாங்கள் ஒதுங்கி ஒழிந்து கொண்டோம் என்று கூறி  அரசியல் செய்ய முற்பட்ட சில அறிவிலிகள் இப்பொழுது வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.” என்றார்.

இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்ததாகக் கூறப்படும் 24 ஜனாஸாக்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனை கிராமத்திலுள்ள திடலில் கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: