13 Aug 2020

தேர்தல் உடன்பாடுகளை நிராகரித்தமைக்கு சஜித் மீது மு.கா பிரதித் தலைவர் கடும் கண்டனம்!

SHARE

(.ஹுஸைன்)

தேர்தல்உடன்பாடுகளைநிராகரித்தமைக்கு சஜித் மீது மு.கா பிரதித் தலைவர் கடும் கண்டனம்!

முஸ்லிம் சமூகத்துக்குரித்தான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில், கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வியாழக்கிழமை 13.08.2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொதுத் தேர்தலில் எட்டப்பட்ட தேர்தல் உடன்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை உதாசீனப்படுத்துவது, அதன் பங்காளிகளின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 “ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன், தேர்தலின்போது செய்யப்பட்ட உடன்பாடுகளில் நம்பிக்கை வைத்தே, முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பணிகளை முன்னெடுத்தது. தொகுதி விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு, அரசியல் செல்வாக்கு பலம் என்பவற்றைக் கருதியே சில தியாகங்களையும் எமது கட்சி செய்தது.


இந்தத் தியாகங்களை கௌரவித்து, தேசியப்பட்டியல் வழங்குவதாக உடன்பாடும் உத்தரவாதமும் வழங்கப்பட்டது. இத் தீர்மானத்தின் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டதால், எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தாத மாவட்டங்களிலும், முஸ்லிம் காங்கிரஸின் கணிசமான முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்தன.

எனினும், தேர்தல் முடிந்த பிற்பாடு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, எமது கட்சிக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்துக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மட்டுமின்றி எமது கட்சியின் போராளிகள், ஆதரவாளர்களும் இந்த ஏமாற்று வேலையினால் மனமுடைந்து போயுள்ளனர். சஜித் பிரேமதாஸ எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெருந்துரோகம் இழைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததும், வரலாற்றில் மறக்க முடியாததும் ஆகும்.


கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ{டன் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டிருந்த உடன்பாடுகளும் வழங்கிய வாக்குறுதிகளும் முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாஸ, மறைந்த தலைவர் அஷ்ரபுக்கு வழங்கிய உறுதிமொழிக்கிணங்க, சிறுபான்மைக் கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ வெட்டுப்புள்ளியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்து, சமூகத்துக்கு விமோசனம் வழங்கியதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

அதுமாத்திரமின்றி, மறைந்த தலைவர் மர்ஹ_ம் அஷ்ரபின் அரசியல் இணக்கப்பாடுகளை கௌரவமாக மதித்த சந்திரிக்கா அம்மையார், அம்பாறைக்கு ஹெலிகொப்டரை அனுப்பி அவரை கொழும்பிற்கு வரவழைத்திருந்தமையை இச்சமயத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் 1989ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தேர்ச்சியாக எமது கட்சிக்கு தேசியப்பட்டியல் கிடைத்திருக்கின்றது. தனித்துவ சின்னமான மரத்தில் போட்டியிட்டு, தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றது மாத்திரமின்றி, தேசியக் கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கைகள் மேற்கொண்டு, 2 தொடக்கம் 4 வரையிலான தேசியப்பட்டியல் எம். பிக்களைப் பெற்றிருக்கின்றோம்.

இம்முறை சஜித் பிரேமதாஸவின் மீது நம்பிக்கை கொண்டதனால், எமக்கு உரித்தான தேசியப்பட்டியல் எம்.பிக்களை இழந்தது மாத்திரமின்றி, கட்சியின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அது பதிந்துவிட்டமை, கட்சிப் போராளிகளை கவலைப்படுத்தியுள்ளது.

இவ்வாறான ஏமாற்றங்கள் எமக்கு ஏற்படுமென தெரிந்திருந்தால், எமது கட்சியின் தனித்துவ சின்னத்தில் போட்டியிட்டிருப்போம். சில மாவட்டங்களில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், நாடளாவிய ரீதியில் எமக்கு வழங்கப்படும் வாக்குகளின் மூலம், தேசியப்பட்டியல் எம்,பி க்களையும் மேலதிகமாக பெற்றிருப்போம். அதுமாத்திரமின்றி, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பயன்படுத்தி, தன்னைப் பலப்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, மு.கா வின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்” எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 


SHARE

Author: verified_user

0 Comments: