16 Jul 2020

பொதுத் தேர்தல் 2020 இற்கான முன்ஏற்பாடுகளை அவதானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு விஜயம்.

SHARE
பொதுத் தேர்தல் 2020 இற்கான முன்ஏற்பாடுகளை அவதானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு விஜயம்.

பொதுத் தேர்தல் 2020 இற்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதன்கிழமை (15) விஜயம் ஒன்றை மேற்கொண்டது.


பிரதி தேர்தல் ஆணையாளர்களான எம்.எம்.எஸ்.கே.பண்டார, எஸ்.அட்சுதன் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையிலான தேர்தல் கடமை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் குழுவினை  மாவட்ட செயலகத்தில் சந்தித்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் பற்றி கலந்துரையாடினர்.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புகள் எவ்வித தங்குதடையுமின்றி சுமுகமாக இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட 4,5,6 ஆகிய தினங்களில் தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வாறு செயற்படுவது என திட்டமிடப்பட்டுள்ளதுடன் குறிப்பாக கொவிட் 19 கெரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து வாக்காளர்களையும், உத்தியோகத்தர்களையும் பாதுகாப்பதற்கான முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அத்தியாவசிய சேவை, தேர்தல் முறைப்பாடுகளை கையேற்கும் பிரிவு, தேர்தல் கடமைக்கான ஊழியர்களை நியமிக்கும் பிரிவு, வாக்கொண்ணும் மண்டப ஒழுங்கு, போக்குவரத்து, நலன்புரி, கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற அனைத்து பிரிவுகளினதும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆந் திகதி பொதுத் தேர்தலினை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து வாக்காளர்களையும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர் குழுவினையும் பாதுகாக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டுமென பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.அட்சுதன் அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.








SHARE

Author: verified_user

0 Comments: