21 Jun 2020

கதிர்காம முருகன் ஆலய உற்சவத்திற்கு வடகிழக்கிலிருந்து தலயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் - பிரசன்னா.

SHARE
(சுதா) 

கதிர்காம முருகன் ஆலய உற்சவத்திற்கு வடகிழக்கிலிருந்து தலயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் - பிரசன்னா.

கதிர்காம முருகன் ஆலயத்திற்கு தல யாத்திரை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தினை காரணமாகக் கொண்டு தல யாத்திரையினை தடைசெய்வது பொருத்தப்பாடான விடயமல்ல, ஆன்மீக வழிபாட்டிற்கு இடையீடு விளைவிக்க முடியாது. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து  ஞாயிற்றுக்கிழமை (21) கருத்துத் தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் உண்மையில் ஆபத்தான விடயமாகும். இதனை நான் மறுக்க வில்லை ஆனால் இதற்கு ஏற்ற வகையில் சமூக இடைவெளியினை பின்பற்றி தல யாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க வேண்டிய கடமைப்பாடு சுகாதாரத் துறையினருக்கு இருக்கின்றது.

எமது நாட்டில் வைரஸ் தொற்று குறைவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் ஏன் கதிர்காம தல யாத்திரைக்கு அனுமதி இது வரைக்கும் வழங்கப்பட வில்லை என்பது கேள்விக்குறியாகும். யாத்திரை மேற்கொள்வோர் சமூக இடைவெளிக்கு அமைவாகவே தமது ஆன்மீகப் பயணத்தினை ஆரம்பிக்கின்றனர்.

ஆன்மீகத்துடன் பல தேவைகள் மற்றும் நேர்த்திகளின் அடிப்படையில் பக்தர்கள் தல யாத்திரை மேற்கொள்வது வழமை பக்தர்களின் நலனினைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் கதிர்காம தல யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும். என கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
   

SHARE

Author: verified_user

0 Comments: