12 Mar 2020

ஆலோசனை சபை அமைக்க மீண்டும் வலியுறுத்தல் - முகாமைத்துவ சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக்.

SHARE
ஆலோசனை சபை அமைக்க மீண்டும் வலியுறுத்தல் - முகாமைத்துவ சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக். 
கிழக்கு மாகாணத்தில், அரச திணைக்களங்களின் ஆலோசனை சபை அமைப்பதனை  வலியுறுத்தி, அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் மீண்டும் கடிமொன்றினை கிழக்கு மாகாண பிரதம செயலாளர், துஷித பீ.வணசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தொழிற் சங்கத்தின் தேசிய ஊடகச் செயலாளர் உ.உதயகாந்த் ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கடிதத்தில், அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 10/2000 இலக்கமும், 2000.02.20ம் திகதியும் கொண்ட சுற்றுநிருபத்திற்கமைய ஆலோசனை சபை அமைத்தல் அவசியமாகும் என்றும், 02/2015 இலக்கமும் 2015.05.19 ம் திகதியும் கொண்ட அரசாங்க நிருவாக சுற்றறிக்கைக் கடிதம் இச்சபை அமைக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தியுள்ளது என்றும் ஆனால் கிழக்கு மாகாணத்தில் இச்சபை இயங்கவில்லை என்றும், தொடர்ச்சியாக இச்சபையினை அமைக்கும்படி எமது சங்கம் கோரி வந்தபோதிலும் அமைக்க முடியாமல் போனது  என்றும் குறிப்பிட்டுள்ளது.
 
இச்சபை அமைக்கப்படுகையில், வருடாந்த இடமாற்றம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, அலுவலகங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களில் காணப்படும் சமமின்மை, புதிய ஆளணி வெற்றிடங்கள் அமைக்கப்பட வேண்டிய அலுவலகங்களில் அமைக்கப்படாமை, ஆளணி எண்ணிக்கை மறுபரிசீலிக்கப்படாமை, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு, தமது கடமைப் பொறுப்புக்களை வழங்குவதில் அநீதி இழைக்கப்படுகின்றமை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படலாம் என்று திடமாக நம்புகின்றேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கிழக்கு மாகாண அரச அலுவலகங்களில் இடம்பெற்று வந்த தாபனவிதிக் கோவை மற்றும் சுற்றுநிருபங்களுக்கு முரணான சில அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்குள்ள நிருவாக முறைமை தற்போது மெல்ல மெல்ல விலகிவருகின்றதென்றும், சட்டத்தினாட்சியை ஏற்படுத்த முடியுமா என்ற ஒரு கேள்விக் குறியுடன், இதனை உருவாக்க நாங்கள் தொடர்ச்சியாக போராடி வந்தோம் என்றும், புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம், புதிய ஆளுநர் இவைகளுடன், தங்களும் புதிதாக வந்தமையை தொடர்ந்து சட்டத்தினாட்சி மெல்ல மெல்ல உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது என்றும் பொறுப்பு வாய்ந்த ஒரு தொழிற் சங்கம் என்ற வகையில், ஒரு முறையான, நன்மையான செயல் இடம்பெறின் அதனை செய்தமைக்காக நன்றியும் பாராட்டுதல்களும் செய்யாமல் இருக்க முடியாது என்றும் அவைகளுக்கு தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குவதும் எமது தலையாய பொறுப்பாகும் என்றும், அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில், தங்களது செயற்பாடுகளுக்கு, நன்றியினையும் பாராட்டுக்களையும் எமது சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் மேலும் இச்செயற்பாடுகள் தொடர்வதற்கு தேவையான முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் எங்களது சங்கம் வழங்குவதற்கு தயாராய் உள்ளதாகவும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: