4 Dec 2019

வெள்ளத்தில் மூழ்கும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் தாழ் நிலங்கள் - போக்குவரத்து பாதிப்பு இயல்பு நிலையில் தளம்பல்.

SHARE
வெள்ளத்தில் மூழ்கும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் தாழ் நிலங்கள் - போக்குவரத்து பாதிப்பு இயல்பு நிலையில் தளம்பல்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் பரவலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் சிலர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதோடு, பலத்த அசௌகரியங்களையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நிர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது இவ்வாறு இருக்க போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு பெரியகுளம், கொவில்போரதீவுக்குளம், வெல்லாவெளிக்குளம், பொறுகாமம் குளம், பழுகாமம் குளம், வட்டிக்குளம், மற்றும் தும்பங்கேணிக்குளம், உள்ளிட்ட சிறியகுளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, புதன்கிழமை (04) காலையிலிருந்து மடையுடன் பலத்த காற்றும் வீசிவருகின்றது. இதனால் மக்கள் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கும், தமது அன்றாட தேவைகளைப் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, விவேகானந்தபுரம் - காக்காச்சுவட்டை வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர்பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் பலத்தை சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது இவ்வாறுஇருக்க போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம், பெரியபோரதீவு, பழுகாமம், வேத்துச்சேனை, போன்ற பல தாழ் நிலப் பகுதிகளிலும், உள்ளுர் வீதிகளிலும், வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வெளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெட்டி ஓடவைக்கும் பணியில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகம், மற்றும், போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வடகீழ் பருவப் பெயற்சி மழையை நம்பி மேற்கொள்ளப்படும் பெரும்போக வேளாண்மைச் செய்கையில் விவவாயிகள் ஈடுபட்டுள்ளதோடு, சோளன், நிலக்கடலை, கௌபி, பயற்றை உள்ளிட்ட மேட்டுநிலப் பயிற் செய்கைககளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் அடைமழையினால் வேள்ளாண்மைச் செய்கை உள்ளிட்ட அனைத்து பயிரினங்களும் வெள்ளத்தில் அள்ளுண்டுபோய் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1651 குடும்பங்களுக்கு மேற்பட்ட  5774 இற்கு மேற்பட்டோர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாவும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவும், உறவினர் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு உலருணவும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக புதன்கிழமை (04) காலை 8.30 மணியுடன் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார். அந்த வகையில் மட்டக்களக்களப்பு நகர் பகுதியில் 23.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  நவகிரிப் பகுதியில் 35.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 24.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 45.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிகுடாப் பகுதியில் 38.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 11.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 44.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 32.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 28.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 50.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமாரன் மேலும் தெரிவித்தார்.
























SHARE

Author: verified_user

0 Comments: