5 Nov 2019

பிரதமருக்கும் தமிழரசு உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

SHARE
பிரதமருக்கும் தமிழரசு உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு.
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்குமான விசேட சந்திப்பு இன்று (05) வாழைச்சேனை பாசிக்குடா த ஹாம் நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் வடகிழக்குத் தலைவர் கி.சேயோன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது தங்களின் ஆதரவு நிலைப்பாட்டுக்கான விடயங்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், தேசிய ரீதியாக உள்ள பிரச்சனைகளான இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பு வரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஏனைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. 

அதனோடு விசேடமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு முடிவுறாத நிலையில் இருக்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் மாவட்ட ரீதியில் காணப்படும் பாலங்கள் புனரமைப்பு விடயங்கள், தொழிற்சாலைகள் அமைப்பு விடயங்கள் என்பனவும் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக நரிப்புல்தோட்டம் பங்குடாவெளி பாலம், சந்திவெளி திகிலிவெட்டை பாலம், மண்டூர் குருமண்வெளி பாலம், கிரான் பாலம் உட்பட வடமுனை வீதி, கிண்ணையடி முருக்கன்தீவு பாலம், வாகரை கட்டுமுறிவுப் பாலம், வாழைச்சேனை நாசிவன்தீவு பாலம் போன்றனவும், தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பில் வாழைச்சேனை காகித ஆலை, இலுப்படிச்சேனை ஓட்டுத் தொழிற்சாலை, தேவாபுரம் அரிசி ஆலை, கும்புறுமூலை அரசு அச்சகம், கூழாவடி மற்றும் இலுப்படிச்சேனை பால் தொழிற்சாலை போன்றனவும் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் கிரான்புல்சேனை அணைக்கட்டு நிர்மானிப்பு, முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் காணி விடுவிப்பு, மட்டக்களப்பு பொது நூல் நிலைய கட்டிடத் தொகுதி பூரணப்படுத்தல், நாவலடி சந்தியில் மட்டக்களப்பு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வாயில் அமைத்தல், கிழக்கு மாகாணத்தில் தொழில் நியமனங்களின் போது சனத்தொகை விகிதாசாரம் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டு கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டது.









SHARE

Author: verified_user

0 Comments: