22 Oct 2019

கோத்தாவின் ஆட்சியிலே சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவு - கிழக்கின் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

SHARE
கோத்தாவின் ஆட்சியிலே சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவு - கிழக்கின் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.
கோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் அந்த  ஆட்சிக் காலத்திலே இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முன்னாள் முதலமைச்ரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது பிரச்சார பொதுக்கூட்டம் ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை 18.10.2019 இரவு  இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட், முஸ்லிம்கள் இந்த நாட்டிலே பாதுகாப்பாக இருக்க முடியாது, உயிருக்கு அஞ்சி நாட்டிலுள்ள வயற் காடுகளுக்குள் மறைந்து வாழுகின்ற ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்க முடியாது.

முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். ஒட்டு மொத்த இந்த நாட்டு மக்களில் ஜனநாயகப் பாதையையும் அமைதியையும் விரும்பும் பெரும்பாலான மக்கள் சஜித் பிறேமதாஸவுக்கே வாக்களிப்பார்கள்.

அதுதான் யதார்த்தம். தமிழ் சமூகத்தை எவ்வாNறு அடக்கி ஆண்டோமோ அதைவிட மிக மோசமான முறையில் முஸ்லிம் சமூகத்தை அடக்கி நசுக்கி நாசம் செய்யலாம் என இந்த இனவாத, மதவாதக் கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.

இதைத்தான் வெலிகமயிலே, பேருவலையிலே களுத்துறையிலே, கண்டியிலே திகனயிலே அம்பாறையிலே செய்து முடித்தார்கள்.

இந்தத் இனவாத துரோகக் கும்பலை எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலிலே நாம் ஒரு அணியாக நின்று முறியடிக்க வேண்டும்.

நமது வாழ்வு, இருப்பு, தனித்துவம், மனித உரிமை எல்லாம் குழிதோண்டிப் புதைக்குமளவுக்கு அச்சமும் பயமும் பீதியும் குடிகொண்டவர்களாக நாம் நடுங்கிக் கொண்டிருந்தோம்.

அந்த நிலைமை தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை இன்று களத்திற்குக் கொண்டு வந்த பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கிறது.

கடந்த காலங்களில் பிறேமதாஸாவை, சந்திரிக்கா அம்மையாரை ஆதரித்து பல சாதனைகள் புரிந்திருக்கிறோம். அதேவேளை சிறுபான்மையினருக்கெதிரான மஹிந்தராஜபக்ஷவின் இராஜாங்கத்தைத் தோற்கடிப்பதிலும் நாம் முன்னின்றோம்.

ஆகவே, நாம் எடுத்த முடிவுகள் ஒருபோதும் கைசேதப்படக் கூடியதல்ல. எனவே, இந்த சமூகப் பணியில் நாம் அனைவரும் தனித்துவம், ஜனநாயகம், எதிர்காலம், வாழ்வு இருப்பு நிம்மதி எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உறுதியாக சிறுபான்மையினரை அனுசரித்து ஆட்சி செய்யக் கூடிய சஜித்தை நாம் ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும்.” என்றார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஆரம்ப கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, உட்பட  முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: