6 Oct 2019

உதவிகளை வழங்கியதனூடாக தவறிழைத்து விட்டோமா என்றும் எண்ணத் தோன்றுகின்றது. மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார்.

SHARE
உதவிகளை வழங்கியதனூடாக தவறிழைத்து விட்டோமா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார்.
யுத்தத்தின்போதும் இயற்கை இடர்கள் ஏற்படும்போதும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிய நிலையில் அவ்வாறு வழங்கப்பட்ட உதவிகளினூடாக சமூகம் பிழையான வழிநடாத்தலுக்கு சென்று விட்டதா என்றும் கருதவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புக்களில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக  ஒரு வார காலம் இடம்பெற்ற பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்த நிலையில் அவர் உரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் வெள்ளிக்கிழமை (06)  இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மக்கள் இன்னமும் எதிர்பார்ப்பும் தங்கி வாழும் மனநிலையும் உள்ளவர்களாக இருப்பதால்  பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு அழிவுகள், இயற்கை இடர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இழப்புக்களையும் துன்பங்களையும் சுமந்தவர்களாக மட்டக்களப்பு மாவட்ட சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு குடும்பவத்திலும் துயரம்மிகு சம்பவங்கள் ஏராளமாக நடந்தேறியிருக்கின்றன.
வறுமை, கடன்சுமை, பாலியல் வல்லுறவு, சிறுவர், துஷ்பிரயோகம், சமூகப் பிரச்சினைகள், தற்கொலைகள், போதைப் பொருள் பாவினை இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் மக்களை ஆக்கிரமித்துள்ளன.

அதன் காரணமாகத்தான் இப்பொழுது பல்வேறு வகையான சிக்கல்கள் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளன.

இவற்றிற்கு மத்தியிலே நாங்களும் பல்வேறு வகையான விடயங்களில் தவறிழைத்திருக்கின்றோமா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

மக்கள் இன்னமும் எதிர்பார்ப்பு மன நிலையுடன் தங்கி வாழும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டு விட்டார்கள். இதன்போதுதான் பல்வேறு பிரச்சிகைள் தலைதூக்குகின்றன.
தற்கொலை செய்தல் மிக இலேசாக இடம்பெறுகின்றது.

கல்லடிப் பாலம் நிருமாணிக்கப்பட்டதன் நோக்கம் பயணத்தை இலகுபடுத்துவதற்காகும். ஆனால் அது தற்கொலைக்குப் பயன்படுத்தும் இடமாக மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.
தங்களைத் தாங்களே நிருவகிக்கத் தெரியாமல் மனக் கிலேசங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இத்தகைய தற்கொலைத் தூண்டலுக்கு ஆட்பட்டு விடுகின்றார்கள்.
இவர்களால் சமூகத்தை எவ்வாறு ஆற்றுப்படுத்த முடியும்.?

அவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு எல்லோருக்கும் உளநலன் பற்றிய பயிற்சிகள் முக்கியமானது.

தற்போதைய தொழினுட்ப யுகத்திலே இளைஞர் சமுதாயம் நன்மைக்குப் பதிலாக அநேக பாதகங்களை இலகுவாகத் துடிக்கொள்கின்றார்கள்.

பாடசாலை செல்லும் மாணவர்களின் கைகளிலே ஒன்றுக்கு இரண்டு கைப்பேசிகள் உள்ளன. இந்த நவீன தகவல் தொழினுட்ப யுகத்தை நன்மைக்குப் பயன்படுத்திக் கொண்டால் அதில் தவறேதும் இல்லை. ஆனால் சாதகங்களுக்குப் பதிலாக பாதகங்களை இறக்குமதி செய்து கொள்வதால் சீரழிவுகள் ஏற்படுகின்றன.

சமூக வலைத்தளங்களிலே பதிவேற்றப்படும் விடயங்களை உற்றுநோக்கினால் அவற்றில் அநேகமானவை அருவருக்கத்தக்கதாக உள்ளன.

நாங்கள் அதிகம் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால் எமது மனித வளங்களை தேவையற்ற விடயங்களுக்குப் பயன்படுத்துகின்றோம்.

மிகவும் பிரயோசனமான ஒருவாரகால இந்த உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சிக்கு சிலரால் பங்குபற்ற முடியவில்லை, அதேவேளை அந்த பொறு;பபற்றவர்களால் தமிழ்நாட்டில் நடக்கின்ற 100 நாள் தொலைக்காட்சி சினிமா ரசனை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து ரசித்து விமர்சனம் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கும் பொறுப்பற்ற தன்மையை வெறுப்புடன் கூறிக் கொள்ள வேண்டியுள்ளது.” என்றார்.SHARE

Author: verified_user

0 Comments: