16 Jun 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிபுல்லாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் வழங்கிய பதில்களும் - வீடியோ

SHARE
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிபுல்லாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,
அதற்கு அவர் வழங்கிய பதில்களும் - வீடியோ 
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களில் சூத்திரதாரியுமான சஹ்ரான் ஹஸீம், ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆ​தரவளித்தார் என்று தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், நேற்று (13) சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார்.  
அப்போது சஹ்ரான், தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பை மாத்திரமே உருவாக்கியிருந்தார் என்றும் அப்போது அவர், பயங்கரவாதியாக இருக்கவில்லை என்றும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், பிரதேசத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவருடைய நிபந்தனைகளுக்குத் தான் இணங்கியதாகவும் பின்னர் அந்த நிபந்தனைகளை மீறியதால், தன்மீது சஹ்ரான், கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறினார்.  
கூட்டங்களின் போது பாடல்களை இயற்ற முடியாது, ஆண்களும் பெண்களும் இணைந்து, கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிபந்தனைகளை, சஹ்ரான் விதித்திருந்ததாகவும் அவற்றைத் தான் விரும்பாத காரணத்தால், 2,000 ஆயிரம் வாக்குகளால், தன்னை சஹ்ரான் தோற்கடித்ததாகவும் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.  
இதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த நியாஸ் ஷெரீப் என்பவரும் சஹ்ரானின் சகாவென்றும் கூறிய முன்னாள் ஆளுநர், அந்நபர், தனக்கு எதிராக பேஸ்புக் ஊடாக பல்வேறான பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறினார்.  
எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், அந்நபரையும் தான் காணவில்லை என்றும் சஹ்ரான் ஒருபோதும் தனக்கு உதவவில்லை என்றும், தானும் ஒருபோதும் சஹ்ரானுக்கு உதவவில்லை என்றும், தன்னை அழிப்பதற்கே, சஹ்ரான் முயற்சித்ததாகவும் ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறினார்.  
“சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அடுத்த தேர்தல் காலங்களில் எனக்குத் தொல்லை இருக்காது. எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்” என்றும் தெரிவித்த அவர், உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதை நான் கூறினேன். அச்சத்திலுள்ள முஸ்லிம்கள் உற்சாகப்படுத்துவதற்காகவே அவ்வாறு தெரிவித்தேன். எல்லா அரசியல் தலைவர்களைப் போல நானும் சஹ்ரானை சந்தித்திருக்கிறேன். 
“அப்​போது, அவர் மதப் போதனைகளில் ஈடுபட்டார். அவரின் உரையாடலில் இளைஞர்கள் பலர் கவர்ந்திருந்தனர். பின்னர், அவர் என்னையும் என் குடும்பத்தினரையும் பகிரங்கமாக விமர்சித்தார். இப்போது, அவர் ஒரு பயங்கரவாதி என்றும் சாட்சியமளித்தார்.  
“2017க்குப் பின்னர், சஹ்ரானோ அவரது சகாக்களோ, காத்தான்குடியில் இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. சஹ்ரான் இப்போது இல்லையென்பதால், நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். அடுத்தத் தேர்தல்கள் காலங்களில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இருக்காது. எவ்விதமான எதிர்ப்புமின்றி நான் செயற்படலாம்” என்றார்.  
“காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப் பலகைகள் இருப்பது, அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதருகின்ற சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காகும். அரபு மொழிகளில் பெயர்பலகைகள் இடக்கூடாது என்றொரு சட்டமில்லை.  
“வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக, இரத்த ஆறு ஓடுமென நான் கூறியது உண்மைதான். வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுவதை, முஸ்லிம்கள் விரும்பவில்லை அதனால்தான் அப்படித் தெரிவித்தேன்” என்றும் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.  
அந்தப் பகுதியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தனர் என்றும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். 
கே: உங்களைப் பற்றி கூறுங்கள்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாயிலாகவே நான் அரசியலுக்கு பிரவேசித்தேன். 1994ஆம் ஆண்டு அக்கட்சியிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், பின்னர் பலமுறை தோல்விகளையும் சந்தித்தேன். பிரதி அமைச்சராகவும் இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றியுள்ளேன். பின்னர், ஜனவரி மாதத்தில் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, கிழக்கு ஆளுநராக பதவியேற்றேன்.
கே: நீங்கள் இலங்கையர் என நம்புகிறேன். அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை,  உலகில் நாங்கள் தான் பெரும்பான்மையினர்” எனக் கூறியது சரியாகுமா?
இது ஒரு பள்ளிவாசலில் பேசிய விடயம் நான் பகிரங்க மேடைகளில் இவ்வாறு கூறவில்லை.  முஸ்லிம் மக்கள்  அங்கு மிகவும் அச்சத்தில் இருந்தனர். அனைத்து செயற்பாடுகளும் வழமையாக, எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி முகத்திடலில் இடம்பெறும். இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன். இதன்போதே  நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே, அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் பிரசுரித்தவர்கள் இதனை முன்னும், பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர்.
கே: நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா?
நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில், நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே கூறினேன்.
சஹ்ரான், அவரது குழுவை கைதுசெய்ய வேண்டும் என, நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தில் பலருடன் இவர் தொடர்பில் இருந்தார்.நியாசும் அவருடன் இருந்தார்.
கே: இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?
இவர்கள் யுத்தக் காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும்  இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர், இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார்.  இராணுவத்துடன் வருவது, போவ​ைதப் பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
கே: இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து?
ஆம், 2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் .
கே: நீங்கள் எந்தக் கட்சியில் அப்போது இருந்தீர்கள்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராகக் களமிறங்கினேன்.
கே: சஹ்ரானின் அழைப்புக்குச் செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன?
வாக்கு பலம் தான்
கே: நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால், அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர் என நினைக்கிறீர்கள்?
இரண்டாயிரம், மூவாயிரம்  வாக்குகள், அப்போது நான் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டு இருந்தார். ஊரில் மூவாயிரம் வாக்குகள் உள்ளது என்றால் பலம் தானே. அதேபோல் அவர் நல்ல பேச்சாளர். ஆகவே, அது பலம் தான். இதற்காக மட்டும் அல்ல, இவரைத் தவிர, வேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஆத் அவர்களுடன் பேசினேன். 10 ஆயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் 1,000 வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளது. அவர்களுடனும் பேசினேன்.இது சாதாரண விடயம்
கே: சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா?
ஆம், சஹ்ரான்  எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம் அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளைக் கொண்டு தாக்குதல்  நடத்துவார்.
கே: அப்படி என்றால், அவருக்கு அனுமதி கிடைக்குமா?
ஆம், சகல சலுகைகளையும்  பெற்றார்.
கே: அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும்  முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக வெறுப்புணர்வு ஏற்படுத்தினார் அப்படியா?
ஆம், அவர்  மத ரீதியில்  தாக்குதல் நடத்துவார். 2010-11காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய விடயங்களை கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள் ஏற்பட்டு, அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஓர் அமைப்பை உருவாக்கினர். ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில், மதகுருவாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்கவேண்டும்.
கே: நீங்கள் ஐ.எஸ் அமைப்பை எதிர்க்கின்றீர்களா?
ஆம் நான் அதனை நாடாளுமன்றத்தில் கூட சிறப்பான உரை ஒன்றில்  தெரிவித்தேன்.
கே: நீங்கள் அவருடன் இணைந்து செயற்பட்டீர்கள் தானே?
ஆரம்பத்தில் எனக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால்  நான் தோற்கடிக்கப்பட்டேன்.
கே: இவர் பயங்கரவாதியாக மாறுவர் என நினைத்தீர்களா?
இவர் பயங்கரவாதியாக  மாறுவர் என நான் நினைக்கவில்லை. செய்தியில் பார்க்கும் வரையில் நான் நினைத்துகூட பார்க்கவில்லை.
கே: பாடசாலை நிகழ்வொன்றில் முரண்பாடுகள் ஏற்பட்டது தானே?
ஆம், மீரா மகளிர் வித்தியாலத்தில் மாணவிகள் கலாசார நடனம் ஆடிய காரணத்துக்காக, அந்த இடத்தில் மேடை போட்டு மோசமாக தாக்கினர். 
கே: தாக்கினார் என்றால்?
திட்டினார்.
கே: அதற்கும்  ஒலிபெருக்கி பொலிஸாரின் அனுமதியுடன் வழங்கப்பட்டதா?
ஆம் பொலிஸாரின்  ஒத்துழைப்புடன் அவர் இந்தச் செயற்பாட்டை செய்தார்.
கே: அவர் ஒவ்வொரு குழுவில் இணைந்து வெளியேர காரணம்?
அவர் அங்கு சென்றால் அவர்களின் அமைப்புகளின் மதக்கொள்​ைக பிழை எனக் கூறி, இது ஏற்றுகொள்ள முடியாது என, விவாதிப்பார். முடியாத நிலையில் அவர்களே இவரை நீக்கிவிடுவர்கள்.
கே: அப்படியென்றால் எதை சரியென கூறுவார்?
அவர், முஸ்லிம்கள் ​ைகயாளும் மத விடயங்கள் தவறானவை என்றும் ஏனைய சில விடயங்கள் தவறு என்றும் அதைச் செய்ய வேண்டாம் என்றும் கூறுவார்.
கே: ஏனைய மதங்களை விமர்சிக்கவில்லையா?
எனக்கு தெரிந்த அளவில் அவர் அவ்வாறு செய்ததாக தெரியவில்லை.
கே: உங்களில் இருந்து அவர் முரண்பட என்ன காரணம்?
இசைத்த காரணத்தினால். 
கே: இசைதான் காரணமா?
ஆம். நாம் இசை போட்ட காரணத்தால்தான் இதை செய்தார்
கே: அவர் இணைந்த குழுக்களில் இசை போடவில்லையா?
அது தெரியவில்லை.
கே: உங்களிடம் இருந்து விலக இசை காரணமாக இருக்காது.
ஆம்  என்னுடன் சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் முழுமையாக என்னுடன் உள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இல்லை
கே: சஹ்ரான்  சூபிக்கு எதிரானவரா?
ஆம்  முழுமையாக எதிரானவர்தான்.
கே: ப்படிஎன்றால் ஏன் உங்களை அழைத்தார்.
இல்லை அனைவருக்கும் அழைப்பு விடுத்ததை போல எனக்கும் அழைப்பு விடுத்தார்.
கே: இறுதி தேர்தலில் உங்களுக்கு அவர் உதவவில்லையா?
இல்லை, அவர் பிடியாணையில் இருந்தார்,
கே: சஹ்ரானுக்கு எதிராக பயங்கரவாத குற்ற முறைப்பாடுகள் செய்தீர்களா ?
பயங்கரவாதி சஹ்ரானை நான் ஒருபோதும் சந்திக்கவில்லை. எனக்கு தெரிந்தது மத தலைவரான சஹ்ரான். அவரது மத செயற்பாடுகளுடன் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால் பயங்கரவாதி என நான் எந்த முறைப்பாடும் செய்யவில்லை. அவரிடம் பயங்கரவாத செயற்பாடுகள் இருந்தது தெரிந்தால், நான் தான் முதலில் முறைப்பாடு செய்திருப்பேன்.
கே: இந்தச் சம்பவம் அனைத்தும் காத்தான்குடியில் தான் நடந்தன. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் பல, இவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளன?
எனக்கு அவர் பயங்கரவாதி எனத் தெரியாது. இவ்வாறு கொலைகார அமைப்பு இவரிடம் இருந்தது என எனக்கு தெரியாது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அவர் ஊரில் இருக்கவில்லை. எனக்கு ஒன்றும் தெரியாது.
கே: வவுணதீவு சம்பவம் பற்றி கூறுங்கள்?
அது பற்றி எனக்கு தெரியாது. அப்போதும் நான், பொலிஸிடம் கேட்டேன். மாவீரர் தினம் நடக்க ஒருநாள் இருந்தது. ஆகவே, இது அந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கும் என்று எண்ணிணேன். அதற்கு அப்பால் சிந்திக்கவில்லை
கே: நாடாளுமன்றத்தில் இரத்த ஆறு ஓடும் என்று கூறியிருந்தீர்கள். சஹ்ரானும் அதைக் கூறியிருந்தார்?
வடக்கு கிழக்கை இணைக்க நாம் விடமாட்டோம். அவ்வாறு பலவந்தமாக இணைத்தால், இரத்த ஆறு ஓடும் என்று கூறினேன். இந்த இணைப்பை விடமாட்டோம். அதற்கு ஏதிராக ஆயுதம் எடுப்போம் போராடுவோம் என்று கூறினேன்.
கே: இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இல்லையா?
முஸ்லிம்கள் வடக்கு -  கிழக்கு இணைப்புக்கு எதிரானவர்கள். அதை செய்தால் இது நடக்கும் என்றேன். தலைவர்கள் என்ற வகையில், அதைத் தடுக்க வேண்டும் என்பதையே கூற நினைத்தேன்.
கே: ஹிரா நிறுவனத்துக்கு எவ்வளவு நிதி வந்தது?
350 மில்லியன் நிதி வந்தது. 
கே: கிழக்கு பல்கலைக்கழகம், ஷரிஆ பல்கலைக்கழகமா?
நான் இதனை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க சகல விதத்திலும் தயாராக உள்ளேன். ஆனால், ஊடகங்கள் இதனை தவறுதலாக விமர்சித்து வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அதிகாரிகள் சிங்களவர்கள். சிலர் தனியார் பல்கலைக்கழகத்தை விரும்பவில்லை.
கே: சவூதியிலிருந்து நிதி வந்தாலும், சூபிகளுக்கு ஆதரவு இல்லையே?
அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் நிதி எனக்கு வருகின்றது. எனக்கு பிரிவினை முக்கியம் இல்லை. மக்களின் சேவகனாக நான் சேவை செய்கின்றேன். வேறு தமிழ் மக்களுக்கும் உதவி செய்துள்ளேன்.
கே: அப்துல் ராசிக் யாரென்று தெரியுமா?
ஆம்
கே: அவருடன் உங்களின் பழக்கம் எப்படி?
அலைபேசியில் பேசியுள்ளோம். இந்தப் பிரச்சினைகளின் பின்னர் பேசினார். இரு தினங்களுக்கும் முன்னரும் பேசினேன்.
கே: அவர் ஐ.எஸ் கொடிகளுடன் கிழக்கில் செயற்பட்டார?
அப்படி ஒன்றும் எனக்குத் தெரியாது
கே: அவர் ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு ஆதரவு என்று கூறுகிறார்கள்?
தௌஹீத் என்ற பெயருக்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒருவர் பயங்கரவாதி என்றால், அவர்களை விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என கூற முடியாது.
கே: காத்தான்குடியை அரபி மயமாக்கினீர்களா?
இது அரபி மயம் அல்ல. எமது மக்களின் அடையாளம். அவ்வாறு உள்ளதால் அதனுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்டடக்கலை தானே. வடக்கிலும் கிழக்கிலும் இந்து கலாசார முறைமை உள்ளது. தெற்கில் பெளத்த முறைமை உள்ளது அது போன்று தான்.
SHARE

Author: verified_user

0 Comments: