16 May 2019

நாட்டைத் தொடர்ந்து குழப்பத்தில் வைத்திருப்பதையே அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தேசமான்ய ஏ.எல்.எம். மீராஸாகிபு

SHARE
நாட்டைத்  தொடர்ந்து குழப்பத்தில் வைத்திருப்பதையே அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தேசமான்ய  ஏ.எல்.எம். மீராஸாகிபு

சமத்துவமற்ற அரசியல் அதிகாரங்களாலும் இனவாத நெருக்குவாரங்களாலும் ஏற்கெனவே பல்வேறு வழிகளிலும் குழம்பிப்போயுள்ள நாட்டைத்  தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்திருப்பதையே அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தேசமான்ய  ஏ.எல்.எம். மீராஸாகிபு தெரிவித்துள்ளார்.

சமகால நாட்டு நடப்புக்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை 16.05.2019 வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தத்தமது சுயலாப அரசியல் Nhநக்கங்களை அடைந்து கொள்வதற்காக இந்த நாட்டை தொடர்ந்தும் அசாதாரண சூழ்நிலையில் வைத்திருக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை   வெளியிட்டு வருவது கவலையளிக்கிறது.

கடந்த மாதம் ஏப்ரில் 21ஆம் திகதி மட்டக்களப்பு உட்பட தலைநகர கொழும்பிலும் தேவாலயங்கள் உல்லாச விடுதிகள் மீது குறிவைத்து  நடாத்தப்பட்ட  மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத, மிலேசத்தனமான குண்டுத் தாக்குதலினால்  பலியானவர்கள் காயப்பட்டவர்கள் அனைவரையும் நினைத்து மனம் வருந்த வேண்டியுள்ளது.

அத்துடன் அவர்களின் உறவுகள் இந்த துக்ககரமான வேதனையிலிருந்து படிப்படியாக விடுபடுவதற்கு அவர்களின் மனதில் எல்லாம் வல்ல இறைவன்   வல்லமையினைக் கொடுக்கவேண்டும்.

இந்த  நாசகாரச் செயலில் ஈடுபட்டவர்களும் இதற்கு துணைபோனவர்களும் இறைவனின் பார்வையிலிருந்து  தப்பிக்கவே முடியாது.

அதனால்தான் இப்பொழுது காலதாமதமின்றி   அவர்களின் அழிவும் ஆரம்பமாகிவிட்டது.

கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் இடம்பெற்று வந்த ஆயத முரண்பாடு கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அதனால், சகல இன மக்களும் அனுபவித்து வந்த 10 வருட கால சமாதானச் சூழல் தற்போது நிலை குலைந்திருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி அரசியல் இலாபம் தேட முற்பட்டு வருவது மேலும் கவலையளிக்கிறது.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு விடயத்தில்  அனைவரும் ஒருமித்துப் பயணிக்க வேண்டியது சகலரதும் கடமையாகும்.

தற்போதைய நிலையில் கல்வி ஒன்றுதான் எமது பிள்ளைகளுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரியதொரு சொத்து.

இப்பொழுது பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகக் குறைந்துள்ளது. அவர்கள் அச்சமின்றி பாடசாலைகளுக்கு செல்லக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்.

பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின்  பாதுகாப்பு விடயத்தில் அக்கறை கொண்டுள்ளதில் தவறொன்றும் இருக்க முடியாது.

சர்வதேசப் பயங்கரவாத சக்திகளை இந்த மண்ணில் வேரூன்ற அனுமதிக்க முடியாது.

எனவே இந்த  சிறிய நாட்டில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாம் அனைவரும் ஒருகுடையின் கீழ் வாழவேண்டும்.

அதனால், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை நிறுத்தி விட்டு அரசியல்  தலைவர்கள் மக்களைக் குழப்பும் விதத்தில் தமது சுயலாப அரசியலுக்காக நாட்டை தொடர்ந்தும் அசாதாரண சூழ்நிலைக்குள் வைத்திருக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பது எமது நாட்டிற்கு உகந்ததல்ல”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: