31 May 2019

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து!

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடியும் என என முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்டஉறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம்
கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமான மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து ஊடகங்களுக்கு வியாழக்கிழமை (30) மாலை கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு இணைத்தலைவர்களாக அமைச்சர் அமீர்அலி, அமைச்சர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் காபீர் நசீர்அகமட் என மூன்று முஸ்லிம்களை நியமித்ததாக அறியக் கூடியதாக இருந்தது. இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 74வீதம் தமிழர்களும், 23வீதம் முஸ்லிம்கள், 01வீதம் சிங்களவர்கள் இருக்கும் நிலையில், 23வீதம் உள்ள முஸ்லிம்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடியும்.

முப்பது வருடயுத்தத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மண்முனைமேற்கு(வவுணதீவு), மண்முனைதென்மேற்கு(பட்டிப்பளை), போரதீவுப்பற்று (வெல்லாவெளி), ஏறாவூர்பற்று(செங்கலடி), கோறளைப்பற்றுதெற்கு (கிரான்), கோறளைப்பற்று வடக்கு(வாகரை) இவைமட்டுமின்றி மீளக்குடியமர்விற்கான அபிவிருத்தி வேலைகள், போராளிகள் தொடர்பான அபிவிருத்தி, கல்வி, காணி, சுகாதாரம்;, மீன்பிடி, நியமனம், பதவிஉயர்வு, கலாசார புனரமைப்புக்கள், விதவைகள் மறுவாழ்வு, இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு, கைதிகள் விடுதலை, கால்நடை, விவசாயம் இவை அனைத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்கள் மிக விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டி உள்ளது.

இவ்வளவு வேலைகளைச் செய்யவேண்டிய நிலையில் இப்பிரதேசங்கள் வறுமையில் வாடுவதாலும், தமிழ்ப் பிரதேசங்களாக இருப்பதாலும், 74 வீதம் தமிழர்கள் உள்ளதாலும் தமிழ்ப்பகுதிக்கு அபிவிருத்தி வேலையில் முன்னிலை வழங்கப்பட வேண்டும். இவைமட்டுமின்றி முப்பது வருடகாலமாக இப்பகுதிகளுக்கு பல விடயங்களில் புறக்கணிப்பு நிகழ்த்தப்பட்டன. இந்தநிலையில் இம் மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு மூன்று முஸ்லிம்களை  நியமிக்கப்பட்டதென்பது நீதியான விடயங்களல்ல. எனவே   இந் நியமனத்தை நிறுத்தி தமிழர்களை இணைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும். இதேவேளை சிலமுஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகள் அபிவிருத்தியில் ஓரளவு நிறைவு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் கடந்த 25வருட காலத்தில் அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக இருந்து கொண்டு தங்களது அதிகாரத்திற்கு ஏற்றவாறு அரசில் உள்ள அனைத்து அரசியல்பலம், ஏனைய வளங்களைப் பயன்படுத்தி ஒரு இனம் சார்பாக முஸ்லிம் பிரதேசங்களுக்கு மட்டும் அபிவிருத்தி வேலைகளைச் செய்து பல தமிழ்ப் பகுதிகள் சுடுகாடாக மாறுவதற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் என்பதை தமிழர்கள் மறப்பதற்கில்லை.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் தங்களுடைய கட்சியின் கீழ் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதற்காக இருவரும் மாறிமாறி முஸ்லிம்களை அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக நியமித்து தமிழர்களை புறம் தள்ளி கட்சிரீதியான செயற்திட்டங்களை அமுல்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் தமிழர்களுக்குத் தேவை உரிமையா, சலுகையா என்னும் விடயத்தில் உரிமையுடன் நின்ற தமிழர்கள் இன்று உரிமையுடன் சேர்த்து அபிவிருத்தி வேலைகளையும் இம் மாவட்டத்தில் இடம்பெற வேண்டும். என போட்டி போட்டு தமிழ்கட்சிகளும், அமைப்புகளும், மக்கள் நலன் விரும்பிகளும் முனைப்புடன் செயற்பட முனையும் போது கடந்த காலத்தைப் போல் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் பாதிப்படக் கூடியவாறு எந்தச் செயற்திட்டங்களையும் தமிழர்களும், தமிழ்ப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை என்பதை ஞாபபடுத்த விரும்புகின்றோம்.

எனவே எதிர்வருகின்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முஸ்லிம் இணைத் தலைவர்களைக் குறைத்து தமிழ் புதிய இணைத்தலைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவைமட்டுமின்றி இனிவரும் காலங்களில்
இம் மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் உள்ளதென்பதையும் மிகக் கூடுதலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டது கூடுதலாக தமிழ்ப்பிரதேசம் என்பதையும் வறுமையில் கூடுதலான கிராமங்கள் உள்ளதென்பதையும் புரிந்து கொண்டு நியமனங்கள், உயர்பதவிகள், சிரேஸ்டபதவிகள் போன்ற விடயங்களில் திறமையும்,விகிதாசாரமும் பார்க்கப்படவேண்டும். இவ்விடயங்களை அமுல் படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள், அமைப்புக்கள்,அரசியற்கட்சிகள்அனைவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும்,  பிரதமர் அவர்களுக்கும் எழுத்து மூலமாக கோரிக்கைகளை முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: