16 May 2019

இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றுவதற்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இதுவரையும் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.

SHARE
இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றுவதற்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இதுவரையும் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலினால் மன உளச்சலுக்கும், மனித பாதுகாப்புக்கும் மத்தியில் உள்ள கிழக்கு மாகாண இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களின் இடமாற்றம் உடன் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கவனத்தில் கொள்ளல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் வியாழக்கிழமை (16) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது…..

கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் கடமையாற்றிய சுமார் 100 இற்கு மேற்பட்ட இஸ்லாமிய ஆசிரியர்கள் பதிலாளின்றி மனித பாதுகாப்புக்கருதி தற்காலிக இடமாற்றம் பெற்று சென்று இருப்பதினால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பினையும், கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு கல்வி வலயங்களில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன.

மேலும் அண்மையில் வெளியாகிய க.பொ.த.(சா.த) பரீட்சையில் கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு கல்வி வலயங்கள் முன்னேற்றமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இவ்ஆசிரியர்கள் பதிலாளின்றி தற்காலிக இடமாற்றம் பெற்றிருப்பது கண்டிக்கதக்கதாகும்.

இலங்கையில் 99 கல்வி வலயங்கள் உள்ள போதிலும் பட்டிருப்பு கல்வி வலயமானது தேசிய ரீதியில் 91 வது நிலையில் மிக மோசமான கல்விப்பின்னிடவை சந்தித்துள்ள இவ்வேளை சகோதர முஸ்லிம் ஆசிரியர்கள் பதிலாளின்றி இடமாற்றம் பெற்றுள்ளார்கள். இது கல்வியில் மேலும் பாரிய பின்னடைவுகளை சந்திக்கவுள்ளது.

இவ் ஆசிரியர்களின் இடமாற்றங்களை கருத்தில் கொண்டும், ஆசிரியர்களின் மனித பாதுகாப்பினை கவனத்தில் கொண்டும் இஸ்லாமிய பாடசாலைகளில் சேவையில் உள்ள தமிழ் ஆசிரியர்களை குறிக்கப்பட்ட வலயங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு மத்திய, மாகாண கல்வியமைச்சுக்கள், மாகாணக்கல்வி பணிப்பாளர் முன் வரவேண்டும்.

பெரும் அச்சத்தின் மத்தியில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடியில் தேசிய, மாகாண பாடசாலைகளில் சேவையில் உள்ள தமிழ் மொழியிலான ஆசிரியர்களின் மனித பாதுகாப்பினை உயர்வாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் மனிதப்பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கல்முனை கல்வி வலயத்தில் இருந்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்கும், வாகரை பிரதேசத்திற்கும் பயணிக்கும் பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சோதணைச் சாவடிகளில் அசௌகரியங்களை எதிர் நோக்குவதினை கருத்தில் கொண்டும் அருகில் உள்ள பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் சரியான முடிவையும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம் பிரதேச பாடசாலைகளில் கல்வி புகட்டும் தமிழ் ஆசிரியர்களை உடனடியாக விடுவித்து பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தமிழ் பிரதேச பாடசாலைகளில் கல்வி புகட்டிய சகோதர முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண கல்விப் பணிப்பாளர் பதிலீடுயின்றி விடுவிப்பதற்கு எடுத்த ஆர்வமானது முஸ்லிம் பிரதேசங்களில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களை விடுவிப்பதற்கு மாகாண கல்விப்பணிப்பாளர் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லை இலங்கை ஆசியர்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கல்முனை கல்வி வலயத்தில் மேலதிகமாக ஆசியர்கள் தேங்கியுள்ளபோதும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, பட்டிருப்பு போன்ற கல்வி வலயங்களில் கல்வி புகட்டும் ஆசிரியர்களை பதிலீடுயின்றி விடுவிப்பதனால் பெரும்பாலும் இடமாற்றம் பெறுகின்ற ஆசியர்கள் கல்முனை வலயத்திலே தேங்குகின்றார்கள். இதனால் இசிரியர்களின் எண்ணிக்கை  இன்னும் அதிகரிக்கின்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பதிலீடுயின்றி ஆசிரியர்களுக்கு விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளதால் வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கணித, விஞ்ஞான, தகவல் தொழிநுட்ப பாடத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்தில் 15 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதால் குறித்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம் தகவல் தொழிநுட்பம் பாடத்துக்கு மேலும் பற்றாக்குறை நிலவுகின்றது.

கல்வி அமைச்சு பாடசாலைகளில் முறையாக கற்பித்தலை மேற்கொள்ள வேண்டுமென சகல அதிபர்களுக்கும், வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு சுற்று நிரூபம் வெளியீட்டுள்ளது. இவ்வருடம் தோற்றவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணம், மற்றும் உயர்தரம் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தங்குதடையின்றி ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை மேற்கொண்டு முறையாக பரீட்சை நடாத்த திட்டமிட்டுள்ள இவ்வேளை பதிலீடுயின்றி ஆசிரியர்களை விடுவிப்பதனால் கிழக்கு மாகாணத்தின் கல்வி இன்னும் பாரிய பின்னடைவுக்கு வழிவகுக்கும்.

இதனால் தமிழர்களின் கல்வி தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றது. இவ்விடயமாக பிள்ளைகளின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இதனை உயரதிகாரிகள், பெற்றோர்கள் சிந்திக்க வேண்டுமல்லவா. தங்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்ற ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

இவ்விடயமாக மாகாண கல்விப்பணிப்பாளர் வலயம்விட்டு வலயம் மாற்றுவதற்குரிய முடிவை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமாக மாகாண கல்விப்பணிப்பாளர்  ஆசிரிய தொழிற்சங்கத்துடனும், அதன் பிரநிதிகளுடனும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்தும் இடமாற்றம் வழங்க வேண்டும். இவ்விடயமாக இலங்கை ஆசிரிய சங்கத்தலைவர் ஜோசப் ஸ்டாலி கல்வி அமைச்சருடனும், பல்வேறு தொழிற்சைங்கதுடனும் கதைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டதும், பல்லின சமூக கலாச்சார விழுமியங்களைக் கொண்டதுமான கிழக்கு மாகாண கல்வி பெரும் பின்னிடைவைச் சந்தித்துள்ளவேளை, சில அரசியல் வாதிகளின் அரசியல் நிரல்களினாலும், கிழக்கு மாகாண ஆளுநரின் கட்டுப்பாட்டிலும் தரமாண கல்வி பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை புதன்கிழமை 15 ஆம் திகதி மத்திய கல்வியமைச்சின் இடமாற்றக் கிளையின் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான நிலைமையை விளக்கியுள்ளதாகவும் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: