10 May 2019

தமிழ் மக்களைக் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை – யோகேஸ்வரன் எம.பி.

SHARE
தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை. பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் வெள்ளிக்கிழமை (10) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அவசரகால சட்டத்தினால் நாட்டில் பல்வேறு கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 21 ஆம் திகதி இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் இன்றுவரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இத்தாக்குதல் தொடர்பில் முன்னமே தெரிந்திருப்பினும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அது தொடர்பான மேலதிக ஆராய்வுகள் நடைபெறவில்லை.

தாக்குதல் தொடர்பான விடயம் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் முன்பு அரசியலில் இருந்தவர்களுக்குத் தெரியவந்திருக்கின்றது. எனவே இதற்குள் பல பிரச்சினைகள் தங்கியிருக்கின்றன. பாதுகாப்புச் சபைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி இருக்கின்றார். சட்டம் ஒழுங்குத் துறையையும் தனது அதிகாரத்தை மீறி வைத்திருக்கின்றார்.  கடந்த மாதம் பாதுகாப்புச் சபை கூடியும் இது தொடர்பில் எதுவும் ஆராயப்படவில்லை.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அழைக்கப்படுவதில்லை என்பதுவும் மிகவும் விசேடமானது. தங்கள் அரசியலை வளர்க்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர் நடக்கும் சமபவங்களைப் பார்க்கும் போது நாங்கள் பாரிய அச்சுறுத்தலுக்குள் உள்ளாகியிருக்கின்றோம். விசாரணைகளில் இது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் சஹ்ரான் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் புலனாய்வுப் பிரிவிலும் இருந்துள்ளார்கள் என்ற கருத்தும் பேசப்படுகின்றது.

கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது புலனாய்வுப் பிரிவில் பல ஆயுதக் குழுக்கள் இருந்தன. கருணா அம்மான் தலைமையிலான குழு, பிள்ளையான் தலைமையிலான குழு, தற்போது இந்த தொஹீத் ஜமாத் அமைப்பும் இருந்ததது என்பது தெரிய வந்துள்ளது.

அண்மையில் வவுணதீவுப் பொலிசார் படுகொலையின் போது முன்னாள் போராளிகளை மாத்திரம் சந்தேகித்து அவர்களைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கின்றார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் தற்போது குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தான் அதற்கான சூத்திரதாரிகள் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

இப்படியாக இருந்தால் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு எவ்வாறு இயங்கியிருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை.

சஹ்ரான் குழுவினர் ஆயுதம் தொடர்பான விடயங்களைக் கையாளுகின்றார்கள் என்ற தகவல் 2017ம் ஆண்டிலேயே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய சகோதரர்களினாலேயே இவ்விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் பொலிசார் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான துன்பியல் நடந்திருக்காது. பொலிசார் அதில் கரிசனை காட்டவில்லை.

குண்டுத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும் புலனாய்வில் பிரிவில் இயங்கிய தௌஹீத் அமைப்பு. இதில் பாரிய சந்தேகம் உள்ளது. நாட்டில் தலைவருக்குத் தெரியாது, பிரதமருக்குத் தெரியாது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்குத் தெரிகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா, அரசியல் தரப்பில் சிலர் பின்னணியில் இருந்தார்களா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

ஏனெனில் தற்போது அரசாங்கத்தில் பல பிரச்சனை. தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக தற்போதைய ஜனாதிபதி துடித்துக் கொண்டிருக்கின்றார். ஆட்சியை தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக இருக்கின்றார். இவர்கள் இருவரையும் துரத்திவிட்டு தனது குடும்பம் கதிரையில் அமர வேண்டும் என்பதில் மஹிந்த கவனமாக இருக்கின்றார். இந்த வேளையில் தான் இந்தத் துன்பியல் இடம்பெற்றிருக்கின்றது.

சிங்கள, தமிழ் என கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் கத்தோலிக்கர்களின் பிரார்த்தனையில் தான் இச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. எனவே ஒட்டுமொத்த இலக்கு தமிழ் மக்களை மையப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே வவுணதீப் பொலிசார் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இளைக்கப்பட்ட நீதியற்ற முறைக்கான நியாயங்கள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது அவசரகாலச் சட்ட விதி மனித உரிமையைப் பறிக்கக் கூடிய வகையில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் தேடுதல் நடவடிக்கை நடைபெறும் போது தமிழர் சார்பில் பிரச்சனை ஏற்பட்டால் அப்பகுதியை முற்றாகச் சுற்றி வளைத்து விடுவார்கள். அனைவரையும் ஓரிடத்திற்கு அழைத்து கடுமையான தேடுதல் இடம்பெறும். ஆனால் தற்போது மட்டக்களப்பில் இஸ்லாமியப் பகுதிகளில் தேடுதல் நடைபெறுகின்றது. அது பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை. இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் எல்லாம் மறைக்கப்படுகின்ற சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதில் பல அரசியல்வாதிகள் பின்னணியாக இருக்கின்றார்கள் என சந்தேகம் இருக்கின்றது. இந்த தௌஹீத் அமைப்புடன் உள்ள தொடர்பு பற்றி தற்போதைய கிழக்கு ஆளுநரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். ஆனால் அரசாங்கம் அதில் கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தான் முக்கியம், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தான் முக்கியம். பயங்கரவாதிகளை அடக்க வேண்டும் என்பது சொல்லில் தான் இருக்கின்றது.

தற்போது தமிழர்களால் ஏதும் இவ்வாறன நிலைமை நடைபெற்றிருந்தால் தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்திருப்பார்கள். ஆனால் தற்போது காத்தான்குடியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிரமான செயற்பாட்டை நாம் காணவில்லை. ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் சுற்றிவளைப்புகள் நடைபெறுகின்றது என செய்திகள் வருகின்றது.

அண்மையில் ஓமடியாமடு பிரதேசத்தில் மாகவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி குத்தகைக்குப் பெற்று குண்டு வெடிப்புடன் தொடர்பு பட்டவர்கள் பாவித்து வந்திருக்கின்றார்கள். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் கொடுக்கின்றார்கள்.

அண்மையில் மிக மோசமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் ஏறாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல அரச அதிகாரிகளின் உத்தியோக முத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. தங்களது மக்களுக்கு காணி இல்லை என்று கோசம்போடும் முஸ்லீம் அரசியல்வாதிகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கள்ள முத்திரைகள் பற்றிப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகுதி அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் உத்தியோகத்தர்களாக இருந்த போது பல காணி உறுதிகள் காணாமல் போயிருக்கின்றன. தற்போது அவர்கள் தமிழர் காணிகளுக்கு குத்தகை, பழைய உறுதி என்றெல்லாம் கொண்டு வருகின்றார்கள். எனவே தற்போது நடைபெற்றிருக்கும் சம்பவத்தை உற்று நோக்கும் போது காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலத்தில் தமிழ் பகுதிகளில் தங்களது உறுதிகள் எனக் காட்டப்பட்ட ஒப்பங்கள், உறுதிகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

50 ஏக்கர்களுக்கு மேல் காணி இருந்தால் அதனை காணி சீர்திருத்த ஆணைக்குழு மேலதிகமானவற்றை கையகப்படுத்தாலம். ஆனால் தற்போதைய கிழக்கு ஆளுநருக்குப் பல இடங்களில் காணி இருக்கின்றது.

பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது. இனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறக் கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம்.

அரச தரப்பு இன்னும் சுயநலமாக இருக்க முடியாது. தங்களில் சுயநலத்தில் இருந்து விலக வேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்துகொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சு இன்னொருவரிடம் கையளிக்கப்பட வேண்டு:ம். இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு முற்றாக அடக்கப்பட வேண்டும். அதற்கான தேடுதல்கள் நடாத்தப்பட வேண்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது.

அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வiயில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: