12 Mar 2019

ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றினுள் இருந்து சடலமாக மீட்பு சந்தேகத்தின்பேரில் மூவர்கைது.

SHARE
ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றினுள் இருந்து சடலமாக மீட்பு சந்தேகத்தின்பேரில் மூவர்கைது.
ஞாயிற்றுக்கிழமை 10.03.2019 காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு 11.03.2019  கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆறு ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள றாணமடு வயல் பிரதேசத்தில் தனது வயலுக்குச் சென்ற மத்திய முகாம் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த  விவசாயியான கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (வயது 62) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்டபோது இவரது சடலம் ஆறு ஒன்றிலிருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றிய பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவருவதாவது…..
மத்திய முகாம் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த மாமன் மற்றும் மருமகன் ஆகிய இருவரும்  சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு தமது வயலுக்கு, இருவேறு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதோடு தத்தமது மோட்டார் சைக்கிள்களை வயல் பாதையில் நிறுத்திவிட்டு தமது வயல்களை  சுற்றிப் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்த இடத்தை நோக்கி மாலை 5 மணியளவில் திரும்பியுள்ளனர்.

அவ்வேளையில் மூவரடங்கிய குழுவினர்  தமது மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடியதைக் கண்டுள்ளனர். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில் மாமனாரின் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் நிலையில் இருந்ததையடுத்து அவரை மருமகன் அவரின் வீடு செல்லும்படி தெரிவித்துவிட்டு இயக்க முடியாதளவுக்கு சேதமாக்கப்பட்ட நிலையில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு கொண்டுவந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று மோட்டார் சைக்கிளை அங்கு இறக்கி வைத்துவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு  சென்று தனது மற்றும் மாமானாரின் மோட்டார் சைக்கிள்களை 3 பேர் கொண்ட குழு அடித்து சேதப்படுத்திதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு தெரிவித்ததன் பின்னர் மருமகன் மாமனாரின் வீட்டுக்குச் சென்றபோது அவர் வீடுதிரும்பவில்லை என்ற தகவலை உறவினர்கள் தெரிவித்ததையடுத்து உடனடியாக மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று தனது மாமனாரை காணவில்லை என முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரும், மோப்ப நாய் தடயவியல் புலனாய்வுப் பிரிவினரும், பிரதேச மக்களும் உறவினர்களும் இணைந்து காணாமல் போனவரைத்  தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தேடுதலன்போது வயல் பகுதியில் காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மாத்திரம் இருப்பதை கண்டுபித்தனர்.

இந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த மேலதிக துப்புத் தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரித்தபோது, தலைக்கவசம் காணப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வயலில் நீர் ஓடும் வாய்க்காலில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள ஆற்றுக்குள் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர்
படுகொலை செய்யப்பட்டவருக்கும்  அங்குள்ள சிலருக்குமிடையில் நீண்டகாலமாக வயல் காணிப் பிரச்சனை இருந்து வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி வெல்லாவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் தடயவியல் பொறுப்பதிகாரி கே.ரவிச்ந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவும் இஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.












SHARE

Author: verified_user

0 Comments: