29 Jan 2019

20000 வீட்டுத்திட்டங்களை நிறுவுவதே எனது பிரதான நோக்கமாகும் - சஜித் பிரேமதாஸ

SHARE
20000 வீட்டுத்திட்டங்களை நிறுவுவதே எனது பிரதான நோக்கமாகும் - சஜித் பிரேமதாஸ
செமட்ட செவன வீட்டமைப்பு மாதிரிக்கிராமங்களை அமைக்கும் செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னிலையாகத் திகழ்கின்றது. இதனை நான் பெருமையாகக் கூறிக் கொள்கின்றேன், இதற்காக வேண்டி 26 தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியுள்ளேன். தற்போது இந்த மாவட்டத்தில் 118 வீட்டுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக் கொண்டு செல்கின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முற்பகுதியிலே 300 வீட்டுத்திட்டங்களுக்கான வேலைத்திட்டங்களை இம்மாவட்டத்தில் ஆரம்பிக்க வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் பாரிய அளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வீட்டுத்திட்ட நிருமாணப் பணிகளை மேற்கொள்ள முடியும். 

என வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் திங்கட் கிழமை (28) மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை மக்களிடம் கையளித்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் 2500 வீட்டுத்திட்டங்களை இலங்கையில் நிறுவுவது எனது நோக்கமாகும். அதனுடைய இரண்டாம் கட்டமாக 5000 வீட்டுத்திட்டங்களையும், மூன்றாம் கட்டமாக 10000 வீட்டுத்திட்டங்களையும், நான்காம் கட்டமாக 20000 வீடுகளை நிறுவுவதமாகும். 2025 ஆம் ஆண்டு வரும்போது இலங்கையிலே உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், வீடற்றோருக்கு வீடு வழங்கி 20000 வீட்டுத்திட்டங்களை நிறுவுவதே எனது பிரதான நோக்கமாகும்.

இன்றுவரை கிட்டத்தட்ட 1682 கிராமங்களுக்கான வீட்டுத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. இன்னும், 818 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆதற்காக வேண்டி எமக்கு இன்னும் 245 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளது. இருக்கின்ற நாட்களுக்குள் ஒரு நாளைக்கு 3 திட்டங்கள் வீதம் வேலைகளை திட்டமிட்டு நாம் அவற்றைத் துரிதப்படுத்திக் கொண்டு செல்கின்றோம். 

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அரசியலில் இரட்டை நாக்கை உடையவர்கள் காணப்படுகின்றார்கள். அதில் எதிர்க் கட்யிலே காணப்படுபவர் சிறந்தவராகக் காணப்படுகின்றார். அவர் சிறந்த பௌத்தன் எனக் கூறிக் கொள்கின்றார். அப்படிப்பட்டவர் கதிர்காமத்திற்கு சென்று அங்குள்ள கடவுளை வணங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் அங்குள்ள இந்துக் கடவுள்களின் சிலைகளை அடித்து நொறுக்க வேண்டும் என சிலர் அவரிடம் கூறினால் அதனை உடையுங்கள் என உத்தவிடுபவராகத்தான் அவர் காணப்படுகின்றார். இப்படித்தானா கடவுளுக்கு மரியாதை செலுத்துவது. 

நானும் ஒரு பௌத்த மதத்தைச் சார்ந்தவன்தான் ஆனால் நான் ஓர் நேர்த்தியான பௌத்தன் இந்துக் கடவுள்களை வழிபடுகின்றேன். மக்கள் முன்சென்று இந்துக் கடவுளை வணங்கிவிட்டு வாகனத்திலே ஏறிச் சென்று இறங்கி விட்டு இந்துக் கடவுள்களின் சிலைகளை உடைக்குமாறு உத்தரவிடுவது சரியா? அப்படிக் கூறுபவன் நானில்லை நான் உள்ளே ஒன்று வெளியே ஒன்று செய்பவனல்ல, எனது வெளிப்படைத்தன்மை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் காணப்படுடுகின்றது. 

நான் ஏனையவர்களைப்போல் இனவாதத்தை, மத வாத்தை தோற்றுவித்து,  மதப்பிரச்சாரங்களை உருவாக்கி மக்களை பின்தங்கிய நிலைக்குத் தள்ளுபவன் நானில்லை இவ்வாறான செயற்பாடுகளில் நான் ஏற்கனவே கூறிய சிலர் செய்து வருகின்றார்கள் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: