4 Nov 2018

எழுந்துள்ள அரசியல் சூழ்நிலைகளைத் தமிழர் தரப்பு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமாகும் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க முன்னாள் மாவட்ட இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன்.

SHARE
மைத்திரி சரியா மஹிந்த சரியா ரணில்  சரியா? பிழையா? சரி எது? பிழை எது? யார் சரி? யார் பிழை? என்ற அரசியல் வியாக்கியானங்களுக்குள் செல்லாமல்,  இன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையைத் தமிழர் தரப்பு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமாகும் என அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க முன்னாள் மாவட்ட இணைப்பாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 04.11.2018 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மைத்திரிபால சிறிசேன மற்றும்  ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான மூன்றரை வருட ‘நல்லாட்சி’ அரசாங்கக் காலத்தில்  தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏதாவது நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்திருந்ததா? என்ற கேள்விக்கு விடை ‘இல்லை’ என்பது எவரும் விளங்கிக் கொள்ளக் கூடிய எளிய எண்கணிதமாகும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் மிகத் தெளிவானது.

இன்று நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சிங்களச் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையானவர்களும் முப்படைகளும் பொலிஸாரும் மகாசங்கத்தினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிதாக பிரதமராக நியமிக்கப்பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் பக்கமே நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தைத் தமிழர் தரப்பு அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிங்கள சமூகத்தின் உளவியலையும் - மனோநிலையையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு வியாக்கியானங்களையும் முன்வைப்பது பொருத்தமான – புத்திசாலித்தனமான அணுகுமுறையாகாது.

ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி அலகை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்புக் கோரிக்கையும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கையும் தமிழர் தரப்பில் நியாயமானதாக இருந்தாலும்கூட சிங்களச் சமூகத்தின் மனதை வெல்லாமல் நாடாளுமன்ற அரசியல் வழிமுறைகளினூடாக மேற்படி கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான சாத்தியமே இல்லை.

எனவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை நிபந்தனைகளாக விதிப்பது அறிவுபூர்வமானதல்ல.
‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்பதற்கிணங்க நடைமுறைச் சாத்தியமான விடயங்களாகவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அரசியல் தீர்மானம், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் விடுவிப்பு, புதிய அரசியலமைப்பு சாத்தியமாகும் வரைக்கும் காத்திராமல் ஏற்கெனவே கையிலுள்ள 13வது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அரசியல் விருப்பத்துடன் அமுல் செய்தல் போன்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடமும் புதிதாக நியமிக்கப்பெற்றுள்ள பிரதமரிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கலாம்.

வடக்குகிழக்கு இணைந்த மொழிவாரி மாநில சுயாட்சி இல்லாமல் புதிய அரசியலமைப்பொன்று வருவது தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது.
இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பெற்ற 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பெற்ற மாகாணசபைகள் சட்டத்தின்; ஷரத்துக்கள் அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 இலிருந்து இன்றுவரை அவ்வொப்பந்தத்தில் கைசாத்திட்ட முன்னாள் ஜனாதிபதிகளான காலஞ்சென்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனா மற்றும் பின்னர் வந்த ஜனாதிபதிகளான காலஞ்சென்ற ஆர். பிரேமதாஸ மற்றும் காலஞ்சென்ற டி.பி.விஜயதுங்க ஆகியோராலும் அதன் பின்னர் ஜனாதிபதி பதவிகளை ஏற்ற சந்திரிக்கா மற்றும் மகிந்தராஜபக்ஷ ஆகியோராலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களாலும் அதன் நோக்கம் அர்த்தமுள்ள வகையில் அரசியல் விருப்பத்துடன் இன்னும் முழுமையாக அமுல் செய்யப்பெற்று நிறைவேற்றப் பெறவில்லை.
அதற்கான அரசியல் அழுத்தம் தமிழர் தரப்பிலிருந்தும் இதுவரை முறையாகக் கொடுபடவும் இல்லை. 


SHARE

Author: verified_user

0 Comments: