வாசிப்பு ஒரு அழகான உன்னதமான விடையம், இது ஒரு கலை, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எல்லா சமயங்களும், எடுத்தியம்புகின்றன. பல புலமையாளர்களும், கல்வியியலாளர்களும், அறிவியல் மேதைகளும், வாசிப்பு பற்றி பல்வேறு சிறப்பு மிக்க கருத்துக்களைக் கூறி வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகின்றனர்.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை பொது நூலகத்தின் நூலகம் திருமதி.எம்.ஏ.சி.ஹரிஷா சமீம் தெரிவித்தார்.களுதாவளை பொது நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடாத்திய ஓவியக் கண்காட்சியும், “விழுமின்” எனும் சஞ்சிகை வெளியீட்டு விழாவும் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் சு.சிவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள், மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைச் செயலாளர் க.லெட்சுமிகாந்தன், நூலகர் எம்.சி.ஹரிஷா சமீம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.நிவேதிதா சந்திரலிங்கம், மற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இலக்கியவாதிகள், வாசகர்வட்ட உறுப்பினர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்....
வாசிப்பின் உச்சநிலையை அடைந்த மிகச் சிறந்த வாசிப்பாளர்களின் எழுத்துக்ளும், கருத்துக்களும்தான் இன்று பல்வேறு விடையங்களுக்கு, தற்போது மேற்கோளாகவும், முன்மாதிரியாகவும் காட்டப்படுகின்றன. இது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், வாசிப்பு ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டு மனிதன் அவனுடைய எண்ணங்களை செதுக்கி ஒழுங்கு படுத்தி அழகு மிக்க, ஆழுமை மிக்க, பண்பு மிக்க, எல்லாம் அறிந்த ஆற்றல் மிக்க, சக்திமிக்கவனாக, ஒரு மனிதனை மாற்றுகின்றது இந்த வாசிப்பு.
இந்த சிறப்பம்சங்களைக் கொண்டு விளங்கும் வாசிப்பு பழக்கங்களை, ஊக்குவிக்கும் வகையில் நாடளாவியரீதியில் வருடாவருடம், நூலகங்கள் தோறும், பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், முன்னெடுக்கப்பட்டு வருவது வாசிப்பின் மேன்மையை உணர்த்தி நிற்கின்றது.
எனவே மாணவர்கள், உள்ளிட்ட அனைவரும், தினமும் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடித்து சமூகத்தில் தலைசிறந்தவர்களாக மிளிர வேண்டும் என வேண்டுகின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment