17 Nov 2018

அனர்த்தங்களின் போது பொதுமக்கள் புதினம் பார்க்க செல்லுவதை தவிர்க்க வேண்டும்.

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்) 

அனர்த்தங்கள் ஏற்படும் போது பொதுமக்கள் புதினம் பார்க்க செல்லுவதை தவிர்க்க வேண்டும் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேச செயலகம் நடாத்திய 2018 ஆம் ஆண்டின் வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலைக்கு முகம்கொடுப்பதற்கும் அனர்த்த நிவாரண சேவைக்கு முன்னாயத்தமாவதற்குமான விழிப்புணர்வு செயலமர்வு வெள்ளிக்கிழமை (16) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் பொதே இதனை தெரிவித்தார். அவர் இதக்போது தெரிவிக்கையில்… 

பொதுமக்கள் சரியாக அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். அனர்த்தங்கள் ஏற்படும் போது பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், கிராம சேவையாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினரால் விடுவிக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் தங்களுடைய விருப்பங்களுக்கு செயற்படுவதால் பாரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன.

சூறாவழி என்றால் அதனைப் பார்க்க மக்கள் திரளுகின்றனர் இதே போன்றுதான் கடல் வருகின்றது, அல்லது கொந்தளிப்பாக உள்ளது என்றால் அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கரைசேர்ப்பதற்கு தோணி வசதி செய்து கொடுத்தால் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலாக புதினம் பார்பதற்காக மக்கள் செல்கின்றனர் இது கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அனர்த்த காலங்களில் பொறுப்புடன் செயற்பட வெண்டும். அனர்த்தங்கள் நடைபெறும் போது அதனை பார்பதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காலத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் பற்றியும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.அகமட் நபாயிஸ் இங்கு விளக்கமளித்தார்.

அம்பாறை மாவட்ட அனர்த முகாமைத்துவ உதவி இணைப்பாளர் ஏ.சி.ஏ. வாஹீர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜதுரை உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்டங்களில் உள்ள அனர்த்த குழுக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், சமூர்தி உத்தியோகத்தர்கள், உடகவியலாளர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: