24 Oct 2018

தனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரக் கிளைகளை களைந்த விவகாரம் முறுகல் நிலையின்போது பிரதேச செயலாளர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சி (video)

SHARE

தனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியதால் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் மீதும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டதால் பதற்ற நிலை மேலும் அதிகரித்தது.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையோரமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி எனுமிடத்தில் தனியார் காணியிலிருந்த அரச மரக் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் தனது மகளுக்கு வீடொன்றை அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை 23.10.2018 வெட்டியுள்ளார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்திலிருந்து மரக் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியை தன்வசம் வைத்துக் கொண்டு மரக்கிளைகளைக் களையும் வேலையைத் தொடங்கிய சற்று நேரத்தில் அங்கு திடீரென வந்து நின்ற தேரர் மற்றும் பௌத்த மத ஆர்வலர்கள் “போதி” மரக் கிளைகளை களைவதை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளனர்.  இவ்வேளையில் சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு மேலும் முறுகல் நிலை ஏற்படாதிருக்க மரக்கிளைகள் வெட்டுவதை தற்போதைக்கு நிறுத்துமாறும் கேட்டுள்ளனர்.

இதற்கமைய தற்போதைக்கு மரக் கிளைகள் வெட்டும் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு அவ்விடத்தில் பொலிஸ் அணியொன்று  பாதுகாப்புக் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சம்பவ இடத்தில் இராணுவ சோதனைச் சாவடியும், பின்னர் பொலிஸ் சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வேளையில் அங்கிருந்த தனியார் காணிக்குள் புத்த சிலை நிறுவப்பட்டு அரச மரமும் நாட்டப்பட்டு அங்கு படையினராலும் பொலிஸாராலும் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றுவந்தன.

மேலும், அவ்விடத்தில் ஏற்கெனவே குடியிருந்த குடும்பங்கள் பாதுகாப்புக் காரணமாக பல வருட காலம் தமது குடியிருப்புக்களைக் காலி செய்து விட்டு அகன்று விட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் சமீப சில வருடங்களுக்குள்ளாக அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு முகாமைச் சூழவிருந்த தனியார் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இவ்வேளையிலேயே காணிச் சொந்தக்காரர்கள் காணிகளைச் சுத்தம் செய்து தமது வாழ்விடங்களுக்கு தமது வசதிக் கேற்ப வீடுகளை அமைத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது மேற்படி அரச மரக்கிளை களையப்பட்டதால் முறுகல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் என். வில்லரெட்னத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தேரர் பிரதேச செயலாளரை பொலிஸார் முன்னிலையில் தாக்குவதற்கு முயற்சி செய்தார் இதையடுத்து பிரதேச செயலாளர் அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேறி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி  யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் நிலமைகளைக் கேட்டறிந்ததுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் தொடர்வு கொண்டு சட்ட நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள் முன்வைத்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: