15 Aug 2016

தமிழ் தேசிய கூட்டமைப்போடு உள்ள உறவை சீர்குலைக்க சிலர் முற்படுகின்றனர் - றவூப் ஹக்கீம்

SHARE
(டிலா )

தமிழ் தேசிய கூட்டமைப்போடு பரஸ்பரமாக செயற்பட எதிர்பார்க்கின்ற போது சில காளான் அமைப்புக்கள், கட்சிகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
"அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்" எனும் நோக்கத்தை அடைந்து கொள்வதன் பொருட்டு கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பாறை - கல்முனை பிரதான நீர் குழாய் மற்றும் கல்முனை நீர் உந்தும் நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு (13) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் எஸ்.ஏ.றஸீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்;

2500 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவு செய்து பெற்றிருக்கின்ற இந்த வேலைத் திட்டத்தின் மூலம் பாரிய குறையை பூர்த்தி செய்திருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தில் இன்னும் 650 கி.மீ தூரம் செய்து முடித்தால், 80 - 85 சதவீத நிலப்பரப்பை பூர்த்தி செய்து ஆகக் கூடுதலான குடிநீர் இணைப்பை பெற்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் இருக்கும்.

இன்று பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு பரஸ்பரமாக செயற்படுகிறோம். இதனை சிலர் குழப்ப எதிர்பார்கின்றனர். நடப்பதற்கு சாத்தியமே இல்லாத விடயத்தை நாங்கள் எழுதிக் கொடுத்து விட்ட மாதிரி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகின்றனர். இவர்களுக்கு மக்கள் அங்கிகாரம் கிடையாது. சொந்தப் பெயரில் எழுதுவதற்குக்கூட பயம். கொஞ்ச காளான் அமைப்புக்கள், கட்சிகளும் இருக்கு இவர்கள் மக்களை குழப்புவதற்கு பொய்களை சொல்லி சின்ன விடயங்களை ஊதிப் பெருப்பிக்கிறார்கள்.

இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. யாரையும் கடத்தி அச்சுறுத்தி எதனையும் செய்யலாம் என்ற காலம் மாறியிருக்கிறது. இதனை தலைகீழாக மாத்தி குழப்பத்தை உண்டாக்க முடியாது. நிரந்தர தீர்வு என்பது எல்லா சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிம்மதியான தீர்வாக இருக்க வேண்டும். இதனை சாதிப்பதற்கான தருணம் நெருங்கி வருகிறது. இதற்கு சில விட்டுக் கொடுப்புக்கள் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர்களான கே.அப்துல் றஸாக், ஏ.எல்.தவம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தின், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், எதிர்கட்சித் தலைவர் ஏ.ஏகாம்பரம், முன்நாள் மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: