மதுபான சாலையொன்றை பின்புறமாக உடைத்து உட்புகுந்து திருட முற்பட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து நையப்
புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட மற்றுமொருவர் தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு –மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையிலுள்ள ஏறாவூர் 4 ஆம் குறிச்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜுலை 14, 2016) இரவு இடம்பெற்றுள்ளது.
மேற்படி மதுபான சாலை பூட்டப்பட்டு சற்று நேரத்தில் இரவு 11 மணியளவில் மதுபானக் கடையின் பின்புறமாக சத்தம் கேட்டுள்ளது. பக்கத்துக் கடைக்காரர்கள் நோட்டமிட்டபோது இருவர் மதுபானசாலையின் பின்பக்க பூட்டுக்களை உடைத்துக் கொண்டு உட்புகுந்தது தெரியவந்துள்ளது.
அயலவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் திருடர்களைப் பிடிக்க முற்பட்டபொழுது ஒருவர் தப்பியோடியுள்ளார்.
எனினும், கடைக்குள் ஒழிந்திருந்த காலி வீதி, பாணந்துறை, சரிக்கமுல்லையைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டிருப்பவரும் தப்பியோடியவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளின்போது தெரியவந்தள்ளது.
கடையிலிருந்து பணமோ சாராயமோ திருடப்பட்டிருக்கவில்லை என்று மதுபானசாலையின் நடத்துநர்கள் தெரிவித்தனர்.
பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment