31 May 2016

விஷமிகள் சிலர் நாட்டையே குழப்புவதற்கு முதலமைச்சருடைய கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாகி இருக்கின்றன - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

SHARE
சம்பூர் விவகாரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை கடிந்து கொண்டதன் பின்னணியில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரளியின் நோக்கமே அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவது தான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விஷமிகள் சிலர் நாட்டையே குழப்புவதற்கு எங்களுடைய முதலமைச்சருடைய அந்தக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாகி இருக்கின்றன. ஆகவே அவர் மன்னிப்புக் கோரவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜோர்தான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல்.எம்.லாபிரை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை இரவு கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றபோது அதில்பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் உரையாற்றும்போது மேலும் கூறியதாவது,
முன்னைய அரசாங்கத்தில் முஸ்லிம்களை வன்முறையினால் வம்புக்கு இழுத்தார்கள். இப்பொழுது முஸ்லிம்களை வலிய வம்புக்கு இழுப்பதற்குத் தயாராகி வருகின்றார்கள். எனவே, இதில் முக்கியமாக நாங்கள் பொறுப்புணர்ச்சியோடும், மிகுந்த சாணக்கியத்தோடும் இந்த விடயத்தை கையாள வேண்டும். 

ஜப்பானிலிருந்து ஜனாதிபதி வரும் வரைக்கும் நான் பொறுமையாக இருக்கின்றேன். நான் பிரதமரோடு இரண்டு நாளாகப் பேசி மூன்றாவது நாளாக இன்றும் பேசினேன். நாங்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருப்பது நல்லது என்பது தான் அவருடைய விருப்பமும் கூட. ஏனென்றால் அரசாங்கத்தையே நெருக்கடிக்குள் தள்ளுவது என்பது தான் இந்தப் புரளியின் பின்னால் இருக்கிற முக்கியமான விடயம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டையே குழப்புவது அதற்கு எங்களுடைய முதலமைச்சருடைய அந்தக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாகி இருக்கின்றன. 

முஸ்லிம் சமூகம் வளர்ந்ததே சகிப்புத் தன்மையால் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆரம்பகாலத்தின் இஸ்லாமிய வளர்ச்சியின் அடிப்படையே சகிப்புத் தன்மை தான். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கத்து மண்ணிலே அனுபவித்த அட்டூழியங்களை எதிர்கொண்டது எதனால் என்று பார்த்தால், முதலாவது இறை நம்பிக்கையில் அசைக்க முடியாத திடமான அந்த நம்பிக்கை. அடுத்தது சகிப்புத் தன்மை என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த சகிப்புத் தன்மை தான் உலகில் ஐந்திலொரு பங்கினராக இந்த சமயத்தினரை ஆக்கியிருக்கிறது. எனவே அவசரப்பட்டு ஆத்திரப்படக் கூடாது என்பதும் தாராளத் தன்மையோடு மன்னிப்புக் கோருவது என்பதும் இந்த சமூகத்தின் மிக முக்கியமான பண்புகளாக மாறவேண்டும். 

எனவே ஒழிவு மறைவில்லாமல் முதலமைச்சருடைய கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் என்பது அதற்கான காரணம், பின்னணி, இவற்றையெல்லாம் ஒரு விசாரணைக்குப் பிறகு அதிதிகளுக்கான உபசரிப்பு வரிசையில் முதலமைச்சருக்கான ஸ்தானம் என்பன குறித்த விடயமெல்லாம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரலின் பின்னால் நடைபெற வேண்டிய விடயங்களாகும். ஏனென்றால், வம்புக்கிழுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்ற கூட்டத்திற்குள் நாங்கள் போய் வலிய மாட்டிக் கொள்வது என்பது இந்தக் கட்டத்திலோ, எந்தக் கட்டிடத்திலோ ஆகுமான விடயமல்ல. இதைப் பல தடவைகள் நான் அனுபவரீதியாக அறிந்திருக்கின்றேன். 

ஒரு தேர்தல் கூட்டத்தில் நான் காவி உடைப் பயங்கரவாதத்தைப் பற்றி கதைக்கப் போய் அடுத்த நாளே உடனே எந்த மாற்றுக் கருத்துமில்லாமல் எந்த நிபந்தனையுமில்லாமல் அது இந்த நாட்டின் பேரினமக்களைப் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்ற வார்த்தையைச் சொல்லி புரளிகிளப்பத் தயாராகிக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் முற்றுப் புள்ளிவைத்தேன். 

ஆனால் இப்போது மன்னிப்புக் கோரினாலும் புரளியை விடுவதாக இல்லை என்ற ஒரு வேகம் இருக்கின்றது. ஏனென்றால் இதற்குப் பின்னால் வேறு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து, லாபகரமாக விடுபடுவது, என்பதும் சாணக்கியமாக இந்த விடயத்தை கையாள்வது என்பதும் ஒரு புறமிருக்க இதன் பின்னால் இருக்கின்ற மேலாதிக்க வாதிகளின் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்டு இன்று கிழக்கு மண்ணிலே பலவந்தமாக மீண்டும் புகுத்த நினைக்கின்ற மேலாதிக்க உணர்வுகளை மிக சாணக்கியமாக முறியடிக்க ஒரு முயற்சியை நாம் கையாள வேண்டும். 

அதை எவ்வாறு செய்வது, எப்படிச் செய்வது? அதேவேளை இந்தநாட்டின் அரசியற் தலைமைகள் இந்த விடயங்களைக் கையாளுவதற்கு நாங்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அதேநேரம் எங்களுடைய சுயகௌரவத்தையும் தன்மானத்தையும் பாதுகாத்துக் கொண்டு அதனைச் செய்வது. இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது, எவ்வாறு செய்வது, எங்கு செய்வது என்ற விடயங்களை நாங்கள் மிக நிதானமாக செயல்பட வேண்டும். ஆனால் உடனடியாகச் செய்ய வேண்டியது வீராப்புப் பேசுவது அல்ல. 

முக்கியமாக எமது இளம் அரசியல்வாதிகள் இதனை தயவு கூர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஒரு சில பிசாசுகளை சென்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விரட்டி இருக்கின்றோம். அந்தப் பிசாசுகள் இந்த ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு மீண்டும் தங்களுடைய மறு பிறவி எடுக்கின்ற அந்த முயற்சிக்கு வழிகோலாமல் தப்பிக்கின்ற உபாயங்களைத் தான் நாங்கள் தேட வேண்டுமே ஒழிய, இந்தக் கட்டத்திலே கௌரவம் குறித்த விடயங்களைப் பேசுவதை ஒருபுறம் வையுங்கள். 


ஆனால் இந்த மண்ணிலே கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அரசியல் என்கின்ற விடயம் இன்று முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய சக்திகள் எங்களிடம் இருக்கின்றது என்ற உணர்வோடு அதை மிக சாணக்கியமாக மிகப் பக்குவமாக பாவிப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டுமேயொழிய, எடுத்த எடுப்பிலேயே இந்தப் பூமிக்கடியிலே புதைத்த பூதங்கள் மீண்டும் தலைதூக்குவதற்கு நாங்கள் வழி சமைக்காமல் மிக லாவகமாக இந்த விடயம் கையாளப்படல் வேண்டும். 
எனவே அந்த விடயங்களை ஜனாதிபதியும் பிரதமரும் கையாளுவார்கள். 

அவர்களோடு கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே நான் முதலமைச்சரை ஒருபுறம் தள்ளிவிட்டு என்னால் அதனை கையாள முடியும். அதிலே இந்தக் கட்சியின், சமூகத்தின், இந்த நாட்டின் எல்லா சிறுபான்மை சமூகங்களும் கௌரவம் மாத்திரமல்ல, எங்களுடைய இருப்பும் எங்களுடைய இருப்புக்கான நியாயங்களும் மிக அழுத்தம் திருத்தமாக இந்த நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்துக்கு முன்னாலும் கையாளப்படுவதை உறுதி செய்ததாக அந்த நடைமுறை அமையும் என்றார். 

கிண்ணியா மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் சுமைய்யா அரபுக் கல்லூரியின் தலைவருமான எஸ்.எம். சரீப் ஆசிரியரின் தலைமையில் ஜோர்தான் நாட்டுக்கான எமது நாட்டின் தூதுவர் ஏ.எல்.எம்.லாபிரை கௌரவிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம். லாஹிர், ஆர்.எம்.அன்வர் முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ், நல்லாட்சிக்கானமக்கள் அமைப்பின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். 


SHARE

Author: verified_user

0 Comments: