1 May 2016

போரதீவுப்பற்று கல்விக் கோட்டமும், அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானங்களும்.

SHARE

(பழுவூரான்)

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டமானது 25.04.2016 அன்று இடம்பெற்றது. இதிலே பல அரசியற் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துசிறப்பித்தார்கள்.
இதன்போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதில் ஒரு தீர்மானமானது, கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துதானது அனைவராலும் வரவேற்கதக்க விடயமொன்றாகும்.

அதாவது 'மட்டு பட்டிருப்பு கல்வி வலய போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் ஒரு 01யுடீ பாடசாலையினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பான அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கும் அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.' நல்லதொரு தீர்மானம்.

அதற்கு முன்னர் போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திலே பல பாடசாலைகளில் பல மாற்றங்களை கொண்டுவருகின்ற சந்தர்ப்பங்களிலே இவ்வாறான 01யுடீ பாடசாலையினை நிறுவுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

இப்பிரதேசத்தை பொறுத்தமட்டில் மாணவர்களின் இடம்பெயர்வானது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களும், வசதி படைத்தவர்களும் நகர்புறத்தை நோக்கி செல்கின்றமையானது இப்பிரதேச பாடசாலைகளின் கல்வியின தரத்தை பின்னோக்கி செல்ல வைக்கின்றது. இங்கே எஞ்சுகின்ற மாணவர்களை வைத்து கல்லிலே நார் உரிப்பது போன்ற செயற்பாட்டினை மேற்கொண்டு ஓரளவேனும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள். அது வரவேற்கத்தக்க விடயம். அதுமட்டுமல்லாமல் க.பொ.த. சா.த பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கூட எழுவான்கரைக்கு செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கதொன்று.

அது மட்டு மில்லாமல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் பாடசாலைகளில் இன்மையினால் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு செல்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. 'பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்கின்ற தமிழ் பழமொழிக்கொப்ப இங்கு இருக்கின்ற மாணவர்கள் தங்களால் இயன்ற பெறுபேற்றினை பெறுகின்றார்கள். இதனால் பாடசாலையின் சித்தி வீதம் உயர்வடையாமல் இருக்கின்றது. இதனால் அதற்கு பின்னுள்ள சந்ததியின் மனதில் இங்கே 'படிப்பு சரியில்லை, ஆசிரியர்கள் இல்லை அதனால்தான் சித்தி வீதம் குறைவடைகின்றது' என்ற மனநிலையில் மாணவர்கள் வேறு பாடசாலைகளினை நோக்கி நகர்கின்றார்கள்.

2014ம் ஆண்டு அதே பிரதேசத்தில் உள்ள பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் பல பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களினை ஒருங்கிணைத்து மிகவும் கோலாகலமாக முன்னாள் பிரதி அமைச்சர்களான கௌரவ மொஹான் லால் கிரேரு மற்றும் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் தொழிநுட்ப பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்மாணவர்கள் இவ்வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் இதுவரைக்கும் தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானத்திற்கு ஆசிரியர் நியமிக்கப்டாமையினால் இன்று அந்த மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளான நிலையில் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளனர். இவ்வாறு இருக்கையில் உயிரியல், கணித விஞ்ஞானபாட பிரிவு எவ்வாறு ஆரம்பிப்பது.?

போரதீவுபபற்று கல்விக்கோட்ட பல பாடசாலைகளில் இன்று வரைக்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமை உள்ளது. அவ்வாறில்லை என்றால் போதுமானதாக இல்லை. முக்கிய பாடங்களுக்கு இவ்வாறான நிலை என்றால் எவ்வாறு மாணவர்கள் உயர்தரத்தில் போரதீவுப்பற்றில் இருந்துகொண்டு உயிரியல் விஞ்ஞாம், கணித விஞ்ஞான பிரிவுகளை தெரிந்தெடுதத்து பயில்வது. அது வெறுமனே ஒரு கனவுதான் என்று கூறவேண்டும்.

இன்று மாவட்ட மட்டத்திலே உயர்தரத்தில் பல  போரதீவுப்பற்று பிரதேசத்தை சேரந்த மாணவர்கள் பலர் சாதனை புரிந்து வருகின்றார்கள். அவர்களை எடுத்துக்கொண்டால் தரம் 5 முடிவடைந்து அல்லது க.பொ.த சா.த முடிவடைந்து நகர்புறப் பாடசாலைகளுக்கு சென்றவர்களாவர்கள்.

ஒரு பாடசாலையிலே விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்கள் நால்வர் தேவையான நிலையில் அந்த பாட்சாலையில் ஒரு ஆசிரியரை வைத்து பாடம் நடாத்திகொண்டிருந்த போது அவரையும் எந்தவிதமான பதிலீடுகளும் இல்லாமல் இடம்மாற்றம் செய்த பெருமை பட்டிருப்பு  கல்வி வலய அதிகாரிகளையே சாரும். இவ்வாறான பிரச்சினைகள் போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ளமையானது குறிப்பிடத்தக்கது.

அண்மையிலே இந்த விடயங்கள் தொடர்பாக பட்டிருப்பு கல்வி வலயப் பணிப்பாளருடன் கலந்துரையாடிய போது அவர் பல விடயங்களை முன்வைத்தார். அதிலே போரதீவுப்பற்று பிரதேச பாடசாலைகள் கஸ்டப் பிரதேசம் மற்றும் அதி கஸ்டப் பிரதேச பாடசாலைகளாக கணிக்கப்படுகின்றது. அந்தப் பிரதேசங்களில் அனைவரும் பணிபுரிந்;து விட்டதாகவும் இனி அந்த இடங்களுக்கு செல்ல யாரும் முன்வருகினறாரகள் இல்லை என்றும், அதனையும் மீறி இடமாற்றம் செய்தால் வலயக்கல்விப்பணிப்பாளர் பழிதீர்க்கின்றார் என்றும், அல்லது மனித உரிமை சங்கத்தில் முறையிடுகின்றார்கள் என்றும், தற்போது இடம்பெற்ற இடமாற்றங்களானது தான் விடுமுறையில் நின்ற காலங்களில் இடம்பெற்றதாகவும் சில இடமாற்றங்கள் கண்மூடித்தமானது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க சேவையிலே இணையும் போது ' இலங்கையின் எந்தபாகத்திற்கும் சென்று சேவை செய்வேன் என்கின்ற நிபந்தனையின் கீழ் iயொப்பமிட்டுள்ளனர்' என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.

மேலும் ஒரு தீர்மானம் அக்கூட்டத்திலே கௌரவ மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் மா.நடராசா ஆகியோரினால்  முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது 'பதிலீடுகள் இல்லாமல் இடம்மாற்றம் செய்யப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களை மீளாய்வு செய்து மீண்டும் அவர்கள் அதே பாடசாலைகளில் கடமையாற்ற அனுமதியளிக்குமாறும் கோரி பிரேரணை முன்வைக்கப்பட்டது' 
அது உண்மைதான் நியாயமற்ற முறையில் பல இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையானது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். களுவாஞ்சிகுடி விலாசத்தில் வதியும் ஒரு ஆசிரியர் 05 வருடங்களாக மட்டக்களப்பு வலயத்திலுள்ள பாடசாலையில் கடமையாற்றி விட்டு மீண்டும் போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்தில் உள்ள கஸ்ரப்பிரதேச பாடசாலையான பழுகாமத்தில் கடiயாற்றிய போது கடந்த ஆசிரிய இடமாற்றத்தின் போது அதே பிரிவில் உள்ள எல்லைக்கிராமங்களில் ஒன்றான அதிகஸ்ரப்பிரதேசமான களுமுந்தன்வெளிக்கு இடமாற்றத்திற்கான கடிதம் கொடுத்தது எந்தவகையில் நியாயமானது. இது ஒரு அரசியற் பழிவாங்கல் என்றே கூறலாம். இவ்வாறு தனிப்பட்டவர்களுக்காக தங்களுக்கு ஏற்றாற் போல் ஆசிரி இடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை நிதர்சனம். 
போரதீவுப்பற்றிலே 01யுடீ பாடசாலையினை உருவாக்குவதாக இருந்தால் தற்போது அது சாத்தியமற்றதொன்று. முதலாவது அனைத்துப் பாடசாலைகளிலுமுள்ள இடைநிலைப்பிரிவுகளுக்கு முக்கிய பாடங்களுக்கான ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படல் வேண்டும். மற்றும் அதற்கான பௌதீக வளங்கள் அனைத்து தேவைகளும் நிரப்பப்பட்ட பின்னரே 01யுடீ பாடசாலையினை உருவாக்குவதற்கான யோசனையினைக் கொண்டுவரலாம். அப்போதுதான் உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவுகளில் கல்வி கற்க தரமுடைய மாணவர்களை போரதீவுப்பற்று பாடசாலைகளில் உருவாக்கலாம் என்பது திண்ணம்.
-திலக்ஸ் ரெட்ணம்-


SHARE

Author: verified_user

0 Comments: