16 Aug 2015

நடைபெறப்போகும்நாடாளுமன்றபொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்கவேண்டும் - மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம்

SHARE

நடைபெறப்போகும்நாடாளுமன்றபொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் சிறந்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப்பயன் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்துவருகின்றது. இதன் காரணமாக தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுவந்தது.

எனினும் கடந்த காலங்களில் பல்வேறு அழுத்த நிலைகள் காரணமாக தமிழ் மக்கள் வாக்களிப்பதில் இருந்து விலகிவந்தனர். ஆனால் இன்றைய நிலையில் அழுத்த நிலைகள் குறைந்த நிலையிலேயே உள்ளது.

எவ்வாறான அழுத்த நிலைகள் வந்தாலும் நாங்கள் புத்திசாதுரியமாக நடக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.குறிப்பாக தமிழ் இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதனை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

வடகிழக்கினைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க வேண்டிய மிகவும் முக்கிய காலகட்டம் இதுவாகும். தமிழ் மக்கள் வாக்களிக்கும் வீதம் குறையுமானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவடைவதுடன் அது வடகிழக்கு தமிழர்களின் இருப்பில் பெரும் தாக்கத்தினை செலுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இது மிக முக்கியத்துவமிக்க தேர்தலாகவே நோக்கப்பட வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 வீதமே வாக்களிப்பு இடம்பெற்றது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றோம். இவ்வாறான ஒரு நிலையை நாங்கள் இந்த தேர்தலில் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் கணிசமாக வாக்களிக்கும் பட்சத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுக்கொள்வதற்கு ஏதுவான நிலையிருக்கின்றது. நாங்கள் விழிப்படைந்த சமூகமாக மாறவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்.

நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அதேபோன்று வேட்பாளர் தெரிவிலும் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியான இழப்புகளை எதிர்கொண்ட சமூகம் என்ற அடிப்படையில் நாங்கள் இன்னும் பின்னோக்கிச்செல்லும் நிலைக்கு செல்லக்கூடாது என்பதில் ஒவ்வொரு வாக்காளரும் மனதில கொள்ள வேண்டும்.
எமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை அர்ப்பணிப்புடன் ஏற்படுத்திதருவார்கள் என்னும் உறுதியுடையவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். நாங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு ஒத்தடம் கொடுத்தவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும்.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். இவற்றை தமிழ் மக்கள் தகுந்த முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகின்றோம்.

திங்கட்கிழமை காலை வேளையில் வாக்குச்சாவடிக்கு அணி, அணியாகச்சென்று உங்கள் வாக்குப்பலத்தினை வெளிப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்பதை மீண்டும் ஒரு தடைவ சுட்டிக்காட்டுக்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: