25 Jul 2015

கடந்த 30வருட கால யுத்தத்தின்போது நாங்கள் உயிரை மட்டும் இழக்கவில்லை.பலவற்றை இழந்துள்ளோம்

SHARE
தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சி.வியாளேந்திரன்(எஸ்.எஸ்.அமல்)தெரிவித்தார். வாகரை பால்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழர்களின் போராட்டங்கள் கடந்த காலத்தில் பல்வேறு வழிகளில் நடாத்தப்பட்டுவந்துள்ளன.இந்த போராட்டங்களில் பெரும் பங்கை இளைஞர்களே ஆற்றியுள்ளனர். இளைஞர்களும் துடிப்பும் உணர்வும் அந்த நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றன.இன்றைய நிலையில் இளைஞர்கள் அதற்கான களத்தினை ஏற்படுத்த முன்வரவேண்டும். நாங்கள் அரசியல் ரீதியான விழிப்படைந்த சமூதாயமாக மாற்றம்பெறவேண்டும்.எமக்குள் உள்ள உணர்வுகளை அரசியல் மூலம் அடைவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். கடந்த 30வருட கால யுத்தத்தின்போது நாங்கள் உயிரை மட்டும் இழக்கவில்லை.பலவற்றை இழந்துள்ளோம்.அவற்றினை நாங்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலான வழிமுறைகளை நாங்கள் முன்கொண்டு செல்லவேண்டும். வடகிழக்கில் இணைந்த தாயகத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.அதற்கான அரசியல் ரீதியான,ஜனநாயக ரீதியான நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். 

இவ்வாறான நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டுமானால் எமக்கு மத்தியில் கல்வி ரீதியான பொருளாதார ரீதியான கட்டமைப்புகளும் வளர்க்கப்படவேண்டும்.அதற்கு தேவையான பலத்தினை பெற்றுக்கொள்ளவேண்டும்.அதற்கான ஓரு களமாகவே நாங்கள் பாராளுமன்றத்தினை பயன்படுத்தவேண்டும். நாங்கள் பேசிக்கொண்டு மட்டும் இருப்பதனால் எதனையும் சாதித்துவிடமுடியாது.அதற்கான நகர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.சிறந்த திட்டமிடலுடன் அதற்கான பயனத்தினை மேற்கொள்ளும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன். இன்று எனக்கு பின்னால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் சமூகம் அணிதிரண்டுள்ளது.கடந்த காலத்தில் எமது இளைஞர்களின் தேவைகள் இனம்கண்டுகொள்ளப்படவில்லை.அவர்களின் எதிர்காலம் தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். இன்று அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம்.ஆண்ட இனம் இன்று படுகுழி நோக்கிய நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இதனை நிமிரச்செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது.இதில் இருந்து யாரும் விலகிச்செல்லமுடியாது.எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்வதன் மூலம் அந்த நகர்வினை கொண்டுசெல்லவேண்டும். அரசியலில் நான் புதியவனாக களமிறங்கினாலும் எமது இனம் சார்ந்த,நோக்கம் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதில் என்னிடம் பல அனுபவங்கள் உள்ளது.துறைசார்ந்த அனுபங்களும் என்னிடம் உள்ளது.அதன் மூலம் எனக்கு கிடைக்கும் அரசியல் வாய்ப்பினை சிறந்தமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றமுடியும். எமது மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் தோற்றம்பெறவேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்கான தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.தமிழ் மக்களுக்கான கட்சியாகவும் உள்ளது.அது தமிழ் மக்களின் தேவையினை இன்று இனம் கண்டு உள்ளது.எதிர்காலத்தில் அதில் இருந்து நழுவிச்செல்லாது என்பதை நான் உறுதிபடக்கூறிக்கொள்கின்றேன். நாங்கள் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலமோ மாற்று கட்சிகளுக்கு பின்னால் செல்வதன் மூலமோ எதுவித பிரயோசனங்களையும் பெறமுடியாது என்பதை எமக்கு கடந்த கால அனுபவங்கள் பெற்றுத்தந்துள்ளன.நாங்கள் மாற்றுக்கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் நன்மையடையப்போவது இன்னோர் சமூகம் என்பதை நாங்கள் உணர்ந்து செயற்படவேண்டும். மிகமுக்கியமாக எதிர்வரும் பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தினை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.அவ்வாறு பயன்படுத்தாதபட்சத்தில் அடுத்த ஐந்து வருடகாலத்திற்கு நாங்கள் மிக மோசமான பின்னடைவினை எதிர்நோக்கவேண்டிவரும் என்றார்


SHARE

Author: verified_user

0 Comments: