6 May 2026

வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்.

SHARE

வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்.

மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்றிட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்ப நிபுணர் குணநேசராஜா பிரதீஷ் தெரிவித்தார். 

வாகரையிலுள்ள கிரிமிச்சைக் குளத்தில் ஒரு தொகுதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு அங்குள்ள உள்ளுர் மீனவ சங்கங்கள், பயனாளிகளான பெண்கள் உட்பட கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. 

நிலைபேறான, காலநிலைக்கு இசைவான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மூலம் பிரதேச மீனவக் குடும்பங்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடியதான இந்தத் திட்டம் வாகரையில் முதன் முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட் விஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளத்தில் மீன்குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து கிராம மீனவ மக்களிடம் உரையாற்றிய மீன் வளர்ப்பு செயற்திட்டத்தின் தொழில்நுட்ப நிபுணர் பிரதீஷ், முதன் முதலாக வாகரைப் பிரதேசத்தில் வேர்ள்ட்விஷன் நிறுவனமானது மிதக்கும் கூண்டுகளை மீனவர் சங்கங்களுக்கு வழங்கி, அவர்களுக்குப் பயிற்சியையும் அளித்து அதன் மூலம் சிறிய மீன் குஞ்சுகளை பெரிய மீன் குஞ்சுகளாக்கி  குளங்களிலே சரியான மீன் இனங்களை இருப்புச் செய்வதை  உறுதிப்படுத்துவதோடு வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ள வழியேற்படுத்தித் தருகிறது. 

வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் தொடர்ச்சியான மீன்மதி செயற்திட்டம் வாகரையிலுள்ள ஏனைய குளங்களுக்கும், மூதூரிலுள்ள குளங்களுக்கும்  விரிவுபடுத்தப்பட உள்ளது. வேள்ட்விஷனின் மீன்மதி  செயற்திட்டம் மீனவ சங்கங்கள் மற்றும் சமூகத்தின் நிலைபேறான பொருளாதார ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்றார். 

மீன்குஞ்சுகளை குளத்தில் விடுவிக்கும் நிகழ்வில்  வேள்ட்விஷன் நிறுவனத்தின் செயற்திட்ட முகாமையாளர் பியோ ஜூட் நவிந்தன், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய உத்தியோகத்தர்  எஸ். அம்பிகன், மீன்மதி  செயற்திட்டத்தின் பணியாளர்கள், பயனாளிகளான பிரதேச மீனவர்கள் ஆகியோருடன் கிரிமிச்சை மீனவர் சங்க உறுப்பினர்களும்  பங்குபற்றியிருந்தனர்.

 









SHARE

Author: verified_user

0 Comments: