3 Nov 2025

இனக்குழுமங்களின் இருப்பைப் பாதுகாப்பவை கலை, கலாசார பண்பாடுகளேயாகும் - கோறளைப்பற்று பிரதேச செயலாளர்.

SHARE

இனக்குழுமங்களின் இருப்பைப் பாதுகாப்பவை கலை, கலாசார பண்பாடுகளேயாகும் - கோறளைப்பற்று பிரதேச செயலாளர்.

ஒரு இனக் குழுமத்தின் இருப்பைப் பாதுகாக்கின்ற விடயங்களாக கலாசார, பண்பாடு, மற்றும் கலைகள் காணப்படுகின்றன. பாரம்பரியமான கலாசார பண்பாடுகள் மருவி கைவிடப்பட்டமைகளே நோய்கள் பிணிகள் அதிகரித்திருக்கின்றமைக்குக் காரணமாகும் என மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தெரிவித்துள்ளார். 

சனிக்கிழமை (01.11.2025) மாலை சந்திவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற கோறளைப்பற்று தெற்கு பிரதேச கலாசார இலக்கிய விழாவில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

ஒரு இனக் குழுமத்தினுடைய பெயரைத் தக்கவைப்பதற்காக இருப்பை வெளிக்கொண்டுவருபனவாக விளங்குவதுதான் பண்பாட்டு விழுமியங்கள். அந்த வகையில் நாங்கள் எங்களுடைய தமிழர்களுக்கென்று பல்வேறுபட்ட கலை பண்பாட்டு கலாசார விழுமியங்கள் இருக்கின்றன. கால ஓட்டம் தொழில்நுட்ப யுகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலும் எங்களுடைய கலை கலாசாரங்கள் மருவிப் போகாமல் தொடர்ச்சியாக பின்பற்றிக் கொண்டு வருகின்ற பிரதேசங்களில் எங்களுடைய கோறளைப்பற்று பிரதேச செயல்கப் பிரிவு பிரதானமான ஒரு பங்கினை வெளிப்படுத்தி வருகின்றது. 

நாங்கள் எங்களுடைய கலை கலாசாரம் பண்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான அர்த்தங்கள் இருக்கின்றன. விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும்கூட விடழுமியங்களுக்குள் கட்டுப்பட்டவையாகத்தான் அமைந்திருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கின்றன. எங்களுடைய முன்னோர்கள் மிகவும் பெறுமதியாக, அருமையாகப் பேணிக்காத்த எங்களுடைய பண்பாடுகள் சிறப்பானவையாகவே உள்ளன. 

தற்போது எங்கு பார்த்தாலும் நோய்கள், ஆனால் எங்களுடைய முன்னோர்களைப் பார்த்தால் பத்துப் பிள்ளைகள், பதினைந்து பிள்ளைகளைப் பெற்றொடுத்தவர்களாக இருப்பார்கள் ஆனால் இப்போதும் ஆரோக்கியமானவர்களாகவே

இருக்கிறார்கள். இதற்குரிய காரணங்கள் என்னவென்று பார்த்தால் அவர்களுடைய பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவர்கள் பேணி வந்த கலாசார, பண்பாடுகள் காரணமாக இருக்கின்றன. வேளாண்மைச் செய்கையைப் பார்த்தால்கூட கூட்டமாக பயணம் செய்து வாடி அமைத்து, சமைத்து உண்டு வேலைளை மேற்கொண்டனர்.

அறுவடையான நெல்லை உரல் உலக்கை பயன்படுத்தி இடித்து, அம்மிக் குளவியில் கொச்சிக்காய் வெங்காயம் அரைத்து சமைத்து உண்ட பாரம்பரியம் இருக்கிறது. 

அந்தவகையில் அலுவலகங்களிலும், நூதனசாலைகளிலும் பார்க்கவேண்டிய, நிலைதான் காணப்படுகிறது. இவைகளெல்லாம்

மருவிப் போனமைதான் நோய்கள் பிணிகள் அதிகரித்தமைக்குக் காரணமாக காணப்படுகிறது என அவர் இதன்போது தெரிவித்தார். 

உதவி பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜின், வரவேற்றபுரையுடன் ஆரம்பமான இவ்விழாவில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்..சி.ஜெய்னுலாப்தீன், உள்ளிட்ட பலர் இதன்போது பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் பாரம்பரிய பறை இசையுடன், அதிதிகள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து வசந்தன்பாடல், நாட்டார்பாடல், நடனம், பரதநாட்டியம், கட்டியகாரன், நாட்டுக்கூத்து, சுளகுநடனம், உள்ளிட்ட பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன. 

தொடர்ந்து இதன்போது பொன்னுசாமி சுந்தரமூர்த்தி(நாட்டார் கலை), நாகமுத்து பிள்ளையான்,(நாட்டுக்கூத்து) , பிள்ளையான் வேலாயுதம்(நாட்டுக்கூத்து) , கிருஸ்ணப்பிள்ளை கிருபைரெட்ணம் (மகிடி கூத்து) ஆகியோரும், இளம் கலைஞர்களான திருமதி அபிநயா விஷ்ணுவர்த்தன்(நடனம்) , திருமதி ஜெயந்தி ஜதீஸ்சன்(நாடகம்) ஆகியோரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம், சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.










 

               

SHARE

Author: verified_user

0 Comments: