12 Oct 2025

இலங்கை தேயிலைக்கு உலகளவில் தங்க விருது,உழைத்த தொழிலாளர்க்கு என்ன விருது கொடுக்கப் போகின்றோம் - பா.உ.ஸ்ரீநேசன்.

SHARE

இலங்கை தேயிலைக்கு உலகளவில் தங்க விருது,உழைத்த தொழிலாளர்க்கு என்ன விருது கொடுக்கப் போகின்றோம் - பா..ஸ்ரீநேசன்.  

உலகளவில் இலங்கையின் கறுப்புத் தேயிலைக்குத் தங்கவிருது கிடைத்திருப்பதாகவும், உலகளவில் கின்னஸ் புத்தகத்தில் அந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். இது பாராட்டத்தக்க விடயமாகும். ஏறத்தாழ ஒரு கிலோ தேயிலையின் விலை இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் வரை காணப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

இந்த வேளையில், அதற்காக உழைத்த மலையகத் தொழிலாளர்களின் நிலைமை பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. 200 ஆண்டுகளாக இந்நாட்டின் பொருளாதாரத்துக்காக அர்ப்பணித்த மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்ககைத்தரம் மோசமாகவே உள்ளது. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து ஞாயிற்றுக்கிழமை(12.10.2025) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது…. 

பிரித்தானியர் ஆட்சியில், அமைக்கப்பட்ட லயன் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில், அவர்கள் அதிகளவாக வாழ்கின்றனர். 

முதல் பிரதமர், தேசபிதா டி.எஸ்.சேனநாயக்க 1948, 1949 களில் மலையக மக்களின் வாக்குரிமை, குடியுரிமையைப் பறித்தார். பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ 1964 இல் சிறிமா--சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக சுமார் 6 இலட்சம் மலையக மக்களை இந்தியாவுக்குப் பலவந்தமாக அனுப்பினார். 1958, 1961, 1964, 1974, 1977, 1981, 1983 களில் இனவன்முறைகள் மூலமாக மலையகத் தமிழர்கள் பல நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டனர். 

நாட்டுக்குப் பெருமை தேடிக்கொடுத்த மலையகத் தொழிலாளர்களின் வாழ்விடம், வாழ்க்கைத்தரம், சம்பளம், அவர்களுக்கான கணிப்பு, உரிமை என்பன இன்றும் குறைந்த மட்டத்திலே காணப்படுகின்றன. 

அவர்களால் ஏற்படுத்தப்படும் பொருளாதார அனுகூலங்களை அனுபவிக்கின்றோம், மதிக்கின்றோம். அதனை ஈட்டித் தந்த தொழிலாளர்களை அதிகார மையமும், அவர்களது பரிவாரங்கமும் மிதிக்கின்றன. இப்படியான சாபக்கேட்டினால் நாட்டின் பொருளாதாரம் 2023 இல் வங்குரோத்தானது. அதில் இருந்து இன்னும் நாடும், மக்களும் மீளவில்லை. 

உழைப்பவனுக்கு கஞ்சி உறிஞ்சுகின்றவனுக்கு கனதியான படையல் என்ற அநியாயம் உள்ள வரை இந்த நாட்டில் அபிவிருத்தியை எட்ட முடியாது. இதனைத் தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது உணர்ந்து செயலாற்ற வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.


 

SHARE

Author: verified_user

0 Comments: