22 Jan 2025

மட்டக்களப்பு - களுதாவளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பது தொடர்பான கலந்துரையாடல்.

SHARE

மட்டக்களப்பு - களுதாவளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பது  தொடர்பான கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளைக் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் அந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ சபையின் தலைவருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை(20.01.2025) இடம்பெற்றது. 

இதன்போது பொருளாதார மத்திய நிலையத்திற்கான முகாமைத்துவ பொறுப்பு சபையின் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களது மரக்கறி வகைகள், பழவகைகள் மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி பொருட்கள் போன்றவற்றை நியாய விலையில் பெற்று, அதனை  பொது மக்களுக்கு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்துவைப்பது தொடர்பாகவும், இப்பொருளாதார மத்திய நிலையத்தின் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டன. 

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் முப்பது மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஐம்பது கடைத் தொகுதிகளை கொண்டதாக இப்பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கலந்துரையாடலில் கடைத்தொகுதிகளை பெற்றுக்கொள்வதற்காக ஆர்வம் காட்டியிருந்த உற்பத்தியாளர்களும், கலந்து கொண்டிருந்ததுடன், பொருளாதார நிலையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு செய்தல் மற்றும் சவால்கள் பற்றியும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மல்ராஜ், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.அறிவழகன்,  விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜெகநாத், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ரி.அபேவிக்கிரம, களுவாஞ்சிகுடி வர்த்தக சங்க தலைவர், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: