10 Dec 2024

கவனத்துடனும் அக்கறையுடனும் போக்குவரத்து விதிகளைப் பிற்பற்றி பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் விழிப்புணர்வு.

SHARE

கவனத்துடனும் அக்கறையுடனும் போக்குவரத்து விதிகளைப் பிற்பற்றி பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் விழிப்புணர்வு.

கவனத்துடனும் அக்கறையுடனும் போக்குவரத்து விதிகளைப் பிற்பற்றி பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் அமைந்த ஒன்லைன் நிகழ்நிலை ஊடான கருத்தாடல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதியில் திங்களன்று (09.12.2024) இடம்பெற்றது. 

சைல்ட் பண்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தினால் “இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் வாழ்வதற்கான உரிமைகளை உறுதி செய்தல்;” எனும் ஒன்லைன் நிகழ்நிலை விழிப்புணர்வுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. 

இந்த விழிப்புணர்வூட்டல் கருத்தாடல் நிகழ்வின் அதிதிகளாக சட்டவாளர் சந்திரலிங்கம் சந்திரகுமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அவசர விபத்துப் பிரிவின் வைத்திய அதிகாரி செபரெட்ணம் பிரான்ஸிஸ் அல்மெய்டா, அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் முகாமையாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி சுரேஷ்,  இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர். 

நிகழ்வைத் துவக்கி வைத்து அங்கு கருத்துத் தெரிவித்த அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்ட இணைப்பாளர் அனுலா, இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 38,000 விபத்துக்கள் ஏற்படுகின்ற தகவலை அறிந்ததன் காரணமாகவே இந்த விழிப்பூட்டல் நிகழ்வை ஆரம்பித்தோம். இலங்கையில் கவனக் குறைவான வீதி விபத்துக்களின் விளைவாக வருடாந்தம் சுமார் 3,000 இறப்புகள் மற்றும் 8,000 கடுமையான காயங்கள் ஏற்படுவதாகக் கண்டறிப்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில் இலங்கையின் வீதிகளில் ஏற்படும் அதிக வீதி விபத்து மரணங்கள் மற்றும் காயங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதித்திருக்கின்றது. சாலை விபத்தில் பலியானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 15-30 வயதுக்குட்பட்டவர்கள். அதனாலேயே இளைஞர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த விளைகின்றோம் என்றார். 

போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் நமதும் மற்றவர்களினதும் வாழ்வதற்கான உரிமைகளை உறுதிசெய்து கொள்வதற்காக இந்த விழிப்புணர்வு கருத்தாடல் செயல்திட்டம் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் நடத்தப்பட்டு வருகின்றது. 

அங்கு கருத்தாடல் நிகழ்வில் இளைஞர் யுவதிகள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அதிதிகள், நாட்டில் நாளாந்தம் ஏராளமான விபத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெறுகின்றன. ஆனால், இந்த அவசர இயந்திர வாழ்க்கை மயப்பட்ட யுகத்தில் நின்று நிதானித்து உற்று நோக்காமல் சிலபோது நாம் விபத்துக்கைளையும் அவை ஏற்படுத்தும் பாரதூர விளைவுகளையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுகின்றோம். இதனால் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 

உயிர், உடமை இழப்புக்களும், அங்கவீனம், வாழ்விழப்பு, சொத்து இழப்புக்கள் ஈடு செய்ய முடியாதவை. எனவே இதுபற்றி  சமதாயத்திலுள்ள அனைவரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 









SHARE

Author: verified_user

0 Comments: