மக்களுக்குச் சேவை வழங்குகின்ற அரச நிறுவனங்களான உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமூகப் பொறுப்புக் கூறல் என்பது மிக முக்கியமானதாகும். - பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ்.
உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்குச் சேவை வழங்குகின்ற அரச நிறுவனங்களாகும். ஆகவே, உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமூகப் பொறுப்புக் கூறல் என்பது மிக முக்கியமானதாகும் என பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட “சமூகப் பொறுப்புக் கூறலும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிபலிப்பும்” எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வில் அவர் உரையாற்றினார்.
சர்வதேச தன்னார்வ அமைப்பான வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த இரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புதனன்று (30.08.2023) நிறைவடைந்தது.
மட்டக்களப்பில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களான நகர சபைகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், அவற்றில் பணியாற்றும் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது உறவு உத்தியோகத்தர்கள், முறைப்பாடுகளைக் கையாளும் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 35 அலுவலர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.
செயலமர்வை சனசமூக அபிவிருத்தி உத் தி யோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான சட்டத்தரணி அன்பழகன் குரூஸ் நடத்தினார்.
நிகழ்வில் உள்ளுராட்சிமன்ற அலுவலர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரகாஷ்,
இதுவரை உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டு வந்த பொறுப்புக் கூறலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியுள்ளது. அதனடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மேலும் வினைத்திறனும் விளைதிறனும் உள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் தரத்தை உருவாக்குவதற்காக அலுவலர்களைப் பயிற்றுவிக்கும் செயல்திட்டமாக இது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் அனுசரணை வழங்கி வருவது பாராட்டத்தக்கது” என்றார்.
நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார், சமூகப் பொறுப்புக் கூறலின் பிரதிபலிப்புக்களைப் பற்றிய புதிய வடிவங்களை அமைப்பதற்கு இந்த செயலமர்வு உதவி இருக்கிறது. சமுதாயத்தில் பொறுப்புணர்வோடு அரச அலுவலர்களின் சேவைப் பரப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே இவ்வாறான செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அதனடிப்படையில் சிறந்ததொரு சமூக மாற்றத்திற்கும் நிலையான அபிவிருத்திக்கும் இது வழிவகுக்கும்.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பது சமுதாய மட்டத்தில் மக்களுக்காக உள்ள ஒரு பெரிய இயங்கு தளம். அதன்படி அதன் சேவைப் பரப்புக்கள் விசாலமானவை. எனவே, அந்த சேவைப் பரப்புக்களை சமுதாயத்திலுள்ள அனைத்து மக்களும் பெற்றுக் கொள்ளும் வகையில் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும். இயற்கை வளங்கள் முகாமைத்துவம் இடர் முகாமைத்துவம் கழிவு முகாமைத்துவம் ஆகியவை சிறப்பாக மேற்கொள்ளப்படுதல் மக்களுக்கான சமூக பொருளாதார ஆரோக்கிய அபிவிருத்திக்கு முக்கியமானது.
இந்த விடயப்பரப்புக்களில் இணைந்து அனுசரணை வழங்கி சேவையாற்ற வீ எபெக்ற் நிறுவனமும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனமும் என்றும் தயாராக உள்ளன” என்றார்.
0 Comments:
Post a Comment