14 Aug 2023

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரிக்கிறது. - மாவட்டத்தில் தொழில் கல்விச் சந்தையில் விவரம் தெரிவிப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரிக்கிறது. - மாவட்டத்தில் தொழில் கல்விச் சந்தையில் விவரம் தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது.

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மாவட்ட செயலக தொழில் நிலையம் அக்ஷன் யுனிற்றி லங்கா ஆகியவை இணைந்து மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை சனிக்கிழமை (12.08.2023) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.

மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 30 இற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வழங்கும் நிறுவனங்கள், அரச தனியார்துறை தொழிற் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன.

சுமார் 1000 ற்கு மேற்பட்ட உடனடித் தொழில் வாய்ப்புக்களோடு இந்நிறுவனங்கள் இந்த தொழிற் சந்தையில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொழில் கல்விச் சந்தையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர். கலாமதி பத்மராஜா……. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு 4 வீதமாக இருந்த தொழிலற்றோர் விகிதம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 7.2 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் மொத்த தொழிலற்றோர் வீதம் 22 ஆக உள்ளது.

உயர்தரக் கல்வியை முடித்தவர்கள், பல்கலைக்கழகம் செல்லாத ஒரு தரப்பினர், சாதாரண தரத்தில் விடுபடுகின்ற தரப்பினர், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் இவ்வாறு பலதரப்பட்டவர்கள் வேலையற்று இருக்கிறார்கள்.

அரசாங்க உத்தியோகங்களை விட தனியார் தொழில் துறைகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தனியார் தொழில் துறையின் மூலம்தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி அடைந்து கொள்ள முடியும். எனவே, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எல்லேருரம் சிந்திக்க வேண்டும்.”  என தெரிவித்தார்.

நிகழ்வில் மாவட்ட உதவிச் செயலாளர் . நவேஸ்வரன், நிகழ்வை இணைப்பாக்கம் செய்து அனுசரணை வழங்கிய அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வி. சுதர்ஷன், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன், மாவட்ட சமூக சேவை அலுவலர் சந்திரகலா கோணேஸ்வரன், மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் தருநர்கள், உள்நாட்டு வெளிநாட்டு தொழில் தேடுவோர் உயர்தர, பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொழில் சந்தை வெற்றியளித்ததாக தொழில் தரு நிறுவனங்களும் தொழில் தேடுவோரும் தெரிவித்தனர். இந்த தொழில் சந்தை நிகழ்வு  இளைஞர் யுவதிகளுக்கான சிறுவர் நிதியத்தின் நிதி அனுசரணையோடு இடம்பெற்றது.
















SHARE

Author: verified_user

0 Comments: