உள்ளுர் வளங்களைக் கொண்டு தங்குதிறனுள்ள உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக தொழிற்துறை சார்ந்த அனுபவப் பரிமாற்று.
உள்ளுரில் கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களைக் கொண்டு நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய தொழிற்துறைகளை மேற்கொள்ளும் முகமாக கைத்தொழில்துறை சார்ந்தோருக்கிடையில் அனுபவப் பகிர்வை மேற்கொண்டு வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் கைத்தொழில் துறையில் ஈடுபடும் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு வடபகுதியில் உள்ளுர் வளங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் நானாவித உற்பத்திப் பொருட்களையும் கைத்தொழில்துறை சார்ந்த நுணுக்கங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வடபகுதிக்கான அனுபவக் கற்கை கள விஜயம் வார இறுதியில் (06,07) இடம்பெற்றது.
கூட்டுறவு உற்பத்திச் சங்கங்களின் உற்பத்தியாளர்களினால் மேற்கொள்ளப்படும் விவசாய உணவு உற்பத்திகள், ஏனைய பாவினைப் பொருட்கள், ஆயர்வேத மருந்துப் பொருட்கள் இன்னும் துறைசார்ந்த உற்பத்திப் பொருட்கள் இக்கள விஜயத்தின்போது பார்வையிடப்பட்டன.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அனுபவக் கற்கை கள விஜயத்தின்போது மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் பெண்கள் மற்றும் நலிவடைந்த ஓரங்கட்டபடலுக்கு உள்ளான கைத்தொழில்துறை உற்பத்தியாளர்கள் சுமார் 60 பேர் கள விஜயத்தின்போது கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இடம்பெறும் நலிவடைந்த சமூக பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டம் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் அமுலாக்கப்பட்டு வருகின்றது.
0 Comments:
Post a Comment