கட்டுரை : இசையால் இன்பமாகும் மட்.களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம். பன்னிரு திருமுறைகளும் முற்றோதும் நிகழ்வும் அதன் மகத்துவமும்.
ஈழ மணித்திருநாட்டில் மட்டுமாநகரின் தென்னகத்தில் களுதேவாலயம் எனச் சிறப்பிக்கப்படும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் சிவனையே தங்கள் மெய்யிலும் மனத்திலும் சித்தமாய்க் கொண்ட 27அருளாளர்களால் அருளப்பட்ட பன்னிரு திருமுறைப் பாக்கள் 18179உம் முற்றோதும் நிகழ்வு 12.05.2023தொடக்கம் 08.06.2023வரை தினமும் மு.ப 06.00மணி தொடக்கம் பி.ப 06.00மணிவரை தொடர்ந்து இடம் பெற்றது.மூர்த்தி தலம் தீர்த்தம் என இயற்கை எழிலோடு அருளாட்சி செய்து கொண்டிருக்கும் விநாயகப் பெருமானின் 16முகூர்த்தங்களையும் அடியவர் கண்டு தொழுது நிற்கும் சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் சிவனையே சித்தமாகக் கொண்ட 63நாயன்மார்களையும் பிரதிஷ்டை செய்து பிரகாரம் நிறைந்து காட்சி கொடுத்தருளும் சங்கம வழிபாட்டின் அற்புத தரிசனம் தினமும் இவ்வாலயத்தில் சிறப்போங்க நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
“திருமுறை முற்றோதுதல்” நிகழ்வானது இறைவனை பண்ணோடு பரவி பாமாலையாக்கி வழிபடும் பாக்கியம் அடியவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஆன்மாக்கள் லயப்படும் வண்ணம் ஆன்மாக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிகாட்டும் ஆன்மீக செயற்பாடுகளை ஆலயநிருவாகம் முன்னெடுத்திருக்கிறது. பன்னிரு திருமுறைகளின் பேரருள் சக்தியினை சைவ உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதுடன் தற்காலத்தில் சைவநெறி தழைத்தோங்கவும், சைவ விழுமியங்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியில் வெகுவாக வேரூன்றச் செய்யவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.
சாமகானப் பிரியனான இறைவனுக்கு சந்நிதிகள் தோறும் பன்னிரு திருமுறைகளையும் இறைவன் மீது கொண்ட பேரன்பினாலும் சைவத்தின் மீது கொண்ட ஆன்மிகப் பற்றினாலும் 'சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கம்" (பாண்டிருப்பு) அக்குழு இந்நிகழ்வின் ஓதுவோர்களாக பங்குபற்றியிருந்தனர். “அவன் அருளாலே அவன் தாள் வணங்க” என்றார் மாணிக்க வாசகப் பெருமான். எனவே அற்புதத்தின் அருட்கொடையாக அதிசயங்கள் காட்டும் ஆனைமுகப்பெருமானின் திவ்விய திருவடிகளில் சிவநாமங்களும், அவனின் அற்புதங்களும் அடியார்களின் நாவினால் பாடப்பெற ஆலயத்தின் தெய்வீக சக்தி அதிகரிப்புடன் அதனைச் செவியேற்றும் அடியவர்களின் உளம் தூய்மை பெற்று, அவர்களின் துன்பங்கள் நீங்கி, தூயமனதினராய் மாற்றுவித்து, பிறப்பினால் ஏற்பட்ட மாயைகள் உடைக்கப்பட்டு நித்திய பேரருள் சக்தியாகிய இறைவனுடன் நிலைத்திருக்க வல்ல சக்தியினை திருமுறைப்பாடல்கள் வழங்குகின்ற ஆற்றல் மிக்கனவாகக் காணப்படுகின்றன.
இந்து மதமானது ஆன்மாக்கள் உய்வுறும் வகையில் நாற்பாத நெறிகளை வாழ்வினில் கடைப்பிடிக்க வல்லதாகக் காட்டுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நெறிகளை பன்னிரு திருமுறைகள் வாழ்க்கை நெறியாகத் தந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய நால்வரும் தங்கள் வாழ்நாளில் இந்நெறி நின்று வாழ்ந்து இன்பத்தமிழ் கொண்டு பாடி அற்புதங்களையும் அதிசயங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தி திருமுறைகளின் சக்தியினால்; இறைவனின் பேரருள் சக்தியினை வசப்படுத்தும் மந்திரங்களாக, தங்களின் ஆன்மீக வாழ்வியல் தடங்களாக இவ்வுலகிற்கு விட்டும் சென்றிருக்கின்றனர்.
இறைவனின் அருளாளர்களாக அவதரித்த நாயன்மார்கள் இறைவனால் போதிக்கப்பட்ட வேத ஆகமங்கள் சுருதிவழி பரப்பப்பட்டதாக இந்துமதம் எடுத்தியம்புகிறது. ஆயினும் தொன்மை பெறு சைவ வேதநூல்களின் சாரத்தைப் பிழிந்து இனிய தமிழில் சைவசித்தாந்தத்தின் சாரமாகவும், இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததாகவும், எழுதியதாகவும் சிறப்புப் பெறும் பன்னிருதிருமுறைப் பாடல்களின் அற்புதம் ஆன்மாக்களில் ஆத்மாத்தமான அறநெறிசார் விழுமியங்களை ஆழமாக வேரூன்றச் செய்து முத்தி நெறியினை பெற்றுக் கொடுக்கும். பேராற்றல் மிக்கனவாகக் கொள்ளப்படுகின்றது.
ஒற்றை மருப்புடைத்து வேதத்தை எழுதி இந்த பருவதத்திற்கு தந்த ஞானசக்தி விநாயகப் பெருமான் சந்நிதானத்தில் திருமுறை முற்றோதுதல் சைவத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் பெருமையினைப் போற்றியும், வாழ்த்தியும் ஏத்தி ஏத்தி தொழுது மெய்யுருகி நின்ற நாயன்மார்களின் செவ்விதழ் விசும்பிய அருட்பாடல்கள் அற்புதமானவை. அவை சைவத் திருநூல்களின் பக்திக்கனிகள் 12திருமுறைகளாக பரவசப்படுத்துபவை. இவை இறைவனின் அழகு, ஆற்றல், அவனது திருவருட் சிறப்பு என்பவற்றை அழகோவியமாக பிரவகிக்கச் செய்பவை. இவற்றை மனம் மொழி மெய்த்தூய்மையுடன் காதலித்து மெய்யன்போடு ஓதுகின்றபோது இவ்வுலக வாழ்க்கை நன்நெறியில் அமைவதோடு அமைதியும், இன்பமும், சீரும் சிறப்பும் பெற்றுத் திகழும் என்பது தீர்க்க தரிசனமாகும். மனிதப் பிறவியில் நாம் அடைந்து கொள்ள வேண்டிய முத்தியின்பத்தை கைகூட்டித்தரும் என்பது உறுதி.
திருமுறைகள் தமிழ் வேதம், இவை இறைவன் அடியார்களினால் அருளப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று திருமுறைகளும் சம்பந்தரும், அடுத்து மூன்றும், திருநாவுக்கரசரும், 7ஆந் திருமுறை சுந்தரராலும், 8ஆம் திருமுறை மாணிக்கவாசகர் திருவாசகமும், திருக்கோவையாரும், 9ஆம் திருமுறையாக திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பவற்றை ஒன்பது பேர் அருளினர். பத்தாம் திருமுறையாக திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரமும், தோத்திர சாத்திரப்பாடல்களும் 11ஆம் திருமுறையாக 12பேர் பாடிய 40திவ்ய பிரபந்தங்களும், சேக்கிழாரால் பாடிய பெரியபுராணமும் 12ஆம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. இதனை நம்பியாண்டான் நம்பி திருமுறைகளாக தொகுத்துள்ளார்.
வைசவர்களாகிய நாம் வையத்துள் வாழ்வாங்கு வாழவும், மண்ணில் நல்லவண்ணம் வாழவும், இறைவுணர்வுடன் ஒன்றுகலந்து, காதலித்து, இன்புற்று அறம், பொருள், இன்பம், வீடு எனும் மனித உன்னத நெறிமுறைகளை கைக் கொள்ளவும் வழிகாட்டியாக திருமுறைகள் அமைந்திருக்கின்றன.
திருமுறைகள் வாழ்வின் நெறிமுறைகளை வகுத்து தந்தவையாக உள்ளன. மனிதன் அவன் வாழ்வின் குறிக்கோள்களை எய்துவதற்கும் ஆன்மீக விழுமியங்களை உணர்த்தவும் புன்நெறிதனில் வாழ்க்கையை இட்டுச் செல்லாமல் நன்நெறியில் நமது வாழ்க்கையினை குவியச்செய்து நீதி வழுவா நெறிமுறையில் வாழ்க்கைப்பாதையினை செலுத்தி மானிடப்பண்புகளை மகத்துவம் மிக்கதாக மாற்றி, மனிதருக்கு உதவுகின்ற வகையில் வாழ்வியலின் அறநூல்களாக மிளிர்கின்றன.
தனி மனித வாழ்வில் அவன் இப்பிறப்பினால் அடைந்து கொள்ளும் இறுதி நிலையினை வடிவமைத்து தந்ததன் மூலம் தனிமனித அமைதி, உலக அமைதி, என்பவற்றை நோக்கிய சைவ நீதியாக திருமுறைகள் காணப்படுகின்றன. மேலும் திருமுறைகள் வலிமையும், மகிமையும் பெற்றவையாகவும் சைவ நெறிக் கருவூலமாகவும் சிறப்புப் பெறுகின்றன.
சிவனைச் சிந்தையிலே கொண்டு தமிழில் தேன்பாகாய் தெவிட்டாமல் பாமாலை புனைந்தேற்றி வழிபட்ட நாயன்மார்கள் கற்பனைக்கு எட்டாத அற்புத அதிசயங்களை நிகழ்த்தி முத்திப் பேற்றினைப் பெற்றனர். அவ்வாறான இறையின்பம் தரும் பன்னிரு திருமுறைப்பாக்களை. இன்றைய தலைமுறையினர் ஆலயங்களில் முறையாக பஞ்சபுராணத்தினை ஓதுவதற்கு தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. சங்கநிதி, பதுமநிதி என்பவற்றைக் கொண்டு ஆயிரம் வேள்விகளைச் செய்து ஆண்டவனை அழைத்தாலும் அவன் அருள் இல்லாவிட்டால் நம் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. ஆனால் அவன் அருளால் அருளப்பட்ட திருமுறைகளை பக்தியுடன் ஓதுவோர்க்கு வினைகள் நீக்கப்பட்டு அறுத்து முத்தி நெறி கிடைக்கும் என்பதே உண்மை.
இன்று மனிதன் மனிதனாக இல்லாமல் விலங்குக் குணங்குறிகளோடு வாழத்தலைப்பட்டுக் கொண்டிருப்பதனால்தான் உலக அமைதி கெட்டு, மனுநீதி மாண்டு கொண்டிருக்கின்றது. இதனால் போர், ஆசை, கொலை, களவு, காமம் போன்ற துர்நடத்தைகளின் துலங்கல்கள் மனித வாழ்வின் மகத்துவத்தைச் வலுவிழக்கச் செய்து மனிதன் உடல், உளரீதியில் இன்னல் உற்று வாழும் மார்க்கமின்றி அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றான். மேலும் இயற்கை இன்னல்களுக்கும் ஈடுகொடுக்க முடியாத மார்க்கத்தை அறியாத மந்தைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறான இழிநிலைக்கு காரணமான பாவம், வினை அறுக்கவல்ல வலுவும், திறனும் திருமுறைகளுக்கு உண்டு. இவை வரையில்லா நலனே தரும் என்பதை அறியத் தலைப்படாமையே நமது துன்பங்கள் அனைத்திற்கும் அறியாமையே மூலக்காரணமாகும். இவ் அறியாமையில் இருந்து மீண்டு நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் வலிமைமிக்கனவாகக் காணப்படுகின்றன.
வினைவயப்பட்டுத் துன்பமுறும் நாம் திருந்தி, உய்யும் பொருட்டு இறைவன் அடியார்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக இத்திருமுறைகளை அருளிச் செய்துள்ளார். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் பெருமைமிக்கது, அளப்பெரியது, ஆற்றல் மிக்கது. மிகுந்த மந்திர சக்தி கொண்டது. அதனாலே தான் அத்தனை அற்புதங்களையும், அதிசயங்களையும் நாயன்மார்கள் இவ்வுலகில் நிகழ்த்தியுள்ளனர். நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால் அதில் உள்ள மந்திர ஆற்றல் நம் உயிரில் கலந்து நமது அறியாமையினைப் போக்கும் யாராலும் மாற்றியமைக்க முடியாத நம்விதியை இறைவனின் கருணையினால் மட்;டுமே மாற்றியமைக்க முடியும் என்பதை நாம் உணர்ந்து வாழ்வதே உன்னதமானதாகும்.
எனவேதான் சைவநெறி தழைத்து, அதன் நீதிவழி ஒழுகி, நித்திய சுகம் பெற வழிகாட்டும். சைவத்தின் புனித நூலான பன்னிரு திருமுறைப்பாடல்களை கோயில்களிலும், இல்லங்களிலும், பாடசாலைகளிலும், பொதுமன்றங்களிலும், இறை ஆராதனை மற்றும் பிரார்த்தனைகளிலும் மெய்யன்புடன் பாராயணம் செய்வதற்கு ஆன்மீக நிறுவனங்களும் அதன் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் வழயமைத்துக் கொடுப்பதன் மூலம் பக்தி நெறி தழைத்தோங்கவும், அதன் பயனாக வந்த கொடுவினையும் அவற்றினால் ஏற்படும் துன்பங்களும் அழிவுகளும், இயற்கை இடர்களும் நீங்கவல்ல சக்தியினை திருமுறைகள் நல்குகின்றன.
திருமுறைகளை நாம் ஓதுகின்ற போது எழுத்துப்பிழை, சொற்பிழை இல்லாமல் பாடுதல் அவசியமானதாகும். “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்...” என்பது மாணிக்கவாசகர் திருவாக்காகும். திருமுறை ஓதுகின்ற போது சொற்குற்றம், பொருட்குற்றம் ஏற்படாவண்ணம் பாடுவது அவசியமானதாகும். மேலும் தேவார திருமுறைப்பாடல்களை பாடும்போது “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்...” எனும் அப்பர் பெருமானின் அருள்வாக்குக்கு ஒப்ப பண்ணோடு ஓதுவதே நன்று. இறைவன் இசையால் மயங்குபவன் அவனை நம்வசப்படுத்த பண்ணோடு பாடல்களைப் பாடுவதே சிறந்ததாகும்.
எனவே 12 திருமுறைகளின் மகத்துவம் சொல்லில் அடங்காத நற்பலனை மானிடர்க்கு நல்குவனவாக அமைந்துள்ளன. அந்த வகையிலே திருமுறைப்பாடல்களை பயபக்தியுடன் உளமுருகி மெய்யன்புடன் சொற்குற்றம், பொருட்குற்றம் நேராவண்ணம் பண்ணோடு பாடுகின்ற போது அன்பு பெருகி எமது சிந்தனை, செயல் என்பன தூய்மை பெற்று எமது வாழ்வு வளமாகவும், அல்லல், அவலங்கள், பேதங்கள் மற்றும் வேற்றுமைகள், வெறுப்புணர்வு, விபரீதங்கள் என்பன மாயமாய் மறைந்து அமைதி, நம்பிக்கை, புரிந்துணர்வு, மனிதநேயம், ஆனந்தம், ஐக்கியம், நல்லுணர்வு, மகிழ்ச்சி என்பன வாழ்வில் சேர்வதுடன் மானிடத்தின் உயிர்நாடியாகவும் மெய்யியல் கருவூலமாகவும் திகழும் திருமுறைகள் ஆன்மீக விழுமியங்களின் ஊற்றுக்கண்களைத் திறந்து இந்த பிரபஞ்சத்தில் பக்திப் பிரவாக ஆறு பெருகெடுக்கச் செய்வதன் மூலம் மானுடத்தின் விடியல் விரைவு பெறும்.
மேலும் தீந்தமிழ் தேனிசையாகத் திகழும் திவ்வியாமிர்தமான திருமுறைகளை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க ஓதுதல், ஓதுவித்தல், செவிமடுத்தல், பரப்புதல், அதன் புகழ் பேசுதல் என்பதோடு திருமுறை தேவாரப்பாடல்களையும் பஞ்சபுராணத் தொகுப்புக்களையும் அச்சேற்றுதல், வெளியிடுதல், தானமாக வழங்கல், இளம் தலை முறையினரிடத்தில் பண்ணிசைப்பாடல்களை முறையாகப் பாடிப்பழக்குதல் என்பன சிவப்பணியின் சிறந்த தொண்டாகும்.
எனவே 12திருமுறைகளையும் முற்றோதுவதற்கு ஆலயங்கள் சார்பாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபையான ஆலய பரிபாலன சபையானது காலத்தின் தேவை கருதி இச்சிவத்தொண்டினை ஆற்றி சைவ நெறியினை மேலோங்கச் செய்வது போற்றுதற்குரியதாகும்.
மேலும் இவ்வாறான அறத்தொண்டினை அனைத்து ஆலயங்களினதும் அறங்காவலர்களும் முன்னெடுத்து 12திருமுறைகளினதும் சிறப்பினை உலகறியச் செய்வதன் மூலம் சைவநெறியின் உன்னதத்தினை உயர்த்தி மானிடம் உய்யும் வகையில் வகை செய்வதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
(க.ஜெயகரன்,களுதாவளை,மட்டக்களப்
0 Comments:
Post a Comment