சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம்.
சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஒன்பதாவது மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை (22.04.2023) நடைபெற்றது.
சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மாதந்தோறும் நடைபெற்றுவரும் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் ஒன்பதாவது பாடசாலைச் செயற்பாடு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருக்கும் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதன் முதல்வர் P.சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.
சிவானந்த கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கல்வி மேம்பாட்டுக்கான மாதாந்தச் செயற்பாடாக இடம்பெற்றுவரும் மகிழ்ச்சிகர மாணவர் பயணம் பாடசாலைகள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளமை கண்கூடு. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கல்வியெனும் மிகப்பெரும் ஆயுதம் ஒன்றே சமூக மேம்பாட்டிற்கான அடிப்படை எனும் கருத்தினை வலியுத்தி அடிப்படை உதவித் திட்டங்களை இணைத்ததாக இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இம் மாதத்திற்கான திட்டத்தில் மட்/மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்குட்பட்ட சுமார் 34 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதோடு மனவெழுச்சி மற்றும் மாணவர் ஊக்குவிப்புக் கருத்துரைகள் அதிசிறந்த வளவாளர்களால் சிறந்த முறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன. இவை அனைத்திற்குமான பூரண நிதி அனுசரணையினை பேரவையின் உறுப்பினரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் நிபுணர் இரத்தினம் விவேகானந்தன் வழங்கியிருந்தார்.
மாணவர்களின் மனவெழுச்சியை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள், சமூக மேம்பாட்டிற்கான ஆயுதமாக கல்வியை அடிப்படையாக்குதல், மாணவப் பருவத்தில் சிறந்த தூரநோக்கினை மையமாக வைத்து சுய திட்டமிடலை மேற்கொள்ளல் முதலான ஆழமான கருத்துக்கள் நடைமுறை உதாரணங்கள் மூலம் சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவை வளவாளர்களால் நிகழ்த்தப்பட்டன.
மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தினை பேரவையின் இணைப்பாளர் சந்தோசம் கோகுலதாசன் சிறந்த முறையில் திட்டமிட்டு ஒழுங்கமைப்புகளைச் செய்திருந்தார். பேரவையின் வளவாளர்களான கலாநிதி த. விவானந்தராஜா மற்றும் கி.பத்மநாதன் ஆகியோர் மாணவர்களுக்கேற்ற மனவெழுச்சிக் கருத்துக்களையும் பெற்றோர்களுக்கேற்ற வழிகாட்டற் கருத்துக்களையும் சுவாரஸ்யமாகவும் உரையாடல்களாகவும் சமர்ப்பணம் செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பேரவை அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment