இயற்கையைப் பாதுகாக்க இளைஞர் அணி சத்தியப் பிரமாணம்.
மட்டக்களப்பு வாவி உட்பட இயற்கையைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அதிடசங்கற்பத்தில் இளைஞர்களும் யுவதிகளும் சத்தியப் பிரமாணம் செய்துள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா தெரிவித்தார்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதத்தில் இளையோர் சமுதாயம் விழிப்புணர்வூட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது விடயமான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மையலம்பாவெளியில் சனிக்கிழமையன்று 20.08.2022 ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா தலைமையில் இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடி மிக்க சமகாலகட்டத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விசேட கவன ஈர்ப்புக் கலந்துரையாடலாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்திலுள்ள சுமார் 25 இளைஞர் யுவதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
குறிப்பாக சூழல் சார்ந்த விடயங்களில் இளைஞர்கள் கரிசனை கொள்ள வேண்டும் என்பதில் செயற்திட்டம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தற்போது மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடு வாவி மாசடைந்து கொண்டு வருகின்றது.
இது இயற்கைக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வாவி நீர் மாசடைந்து வருவதால் அதில் வளரும் மீனினங்களும் நோய்வாய்ப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த மீன்களை உண்ணும் மனிதர்களும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகலாம். அந்த நிலைமயைத் தவிர்த்துக் கொள்ள வாவியைத் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கருத்து அங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கென செயற்குழுவொன்றும் உருவாக்கப்பட்டது. தற்போது மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளது. இது சில இடங்களில் துர்நாற்றத்தையும் வெளியிடுகிறது.
0 Comments:
Post a Comment