8 Aug 2022

நலிவுற்ற மீனவர்களுக்கு அவசரநிலை உதவித் திட்டம்.

SHARE

நலிவுற்ற மீனவர்களுக்கு அவசரநிலை உதவித் திட்டம்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால்  நலிவுற்ற மீனவர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ள மாதாந்த அவசரநிலை உதவித் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இலங்கையின் மிகவும் வறிய நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த சிறிய அளவிலான கைவினை கடல் மீனவர்களுக்கு உணவு ஊட்டச்சத்து தேவைகளை வழங்கும் குறிக்கோளுடன் உதவும் செயல் திட்டம் பற்றி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் நலிவுற்ற மீனவர்களின் உடனடி உணவுப் பாதுகாப்பு தேவைகளை அடையாளப்படுத்தி ஒரு மீனவக் குடும்பத்திற்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு, 42 அமெரிக்க டொலர் (15 ஆயிரம் ரூபாய்) நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத்தை வழங்குவதற்கு இந்த செயல்திட்டம் இலக்கு வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் பிரமாணங்களைப் பூர்த்தி செய்பவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்தல்  செயற்பாடு வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருப்பது முக்கியமானதாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய பயனாளி மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய  மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

பாரம்பரிய இயந்திரமற்ற மீன்பிடிப் படகு (NTRBபடகு) மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

2022ஆம் ஆண்டிற்கான NTRB படகின் செயற்படுத்தல் அனுமதிப் பத்திரம் 15.06.2022 இற்கு முன்பதாக புதுப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

மேலதிக வருமான மூலங்களைக் கொண்டிருப்பவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

பயனாளிகள் எந்தவொரு அரசாங்க அல்லது தனியார் நிறுவனத்திலும் வேலை செய்யக் கூடாது.

மேற்கூறிய அளவுகோல்களின்படி பயனாளிகள் தேர்வுபட்டியல், பொது மக்கள் பார்வைக்காகவும், கருத்து தெரிவிப்பதற்காகவும் பொதுவான இடத்தில் காட்டப்படும்.

பயனாளிகளின் பட்டியல் உதவி  இயக்குநரால் சான்றளிக்கப்பட்டு, மீன்வள மற்றும் நீரியல் வளங்கள் பணிப்பாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிவித்தல்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவ சமுதாயத்தினருக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: