2 Aug 2022

கல்வி அமைச்சரிடம் முறையிடத் தீர்மானம்.

SHARE

கல்வி அமைச்சரிடம் முறையிடத் தீர்மானம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகள் கல்வியமைச்சின் தீர்மானத்தை மீறிச் செயற்படுவது கண்டனத்திற்குரியது, அது குறித்து கல்வி அமைச்சிடம் முறையிடத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா திங்கள்கிழமை 02.08.2022 அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாடு இப்பொழுது பொருளாதார நெருக்கடி, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருளகளுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களின் அடிப்படையில் இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிய இருக்கின்றது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலைமை உள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளும்முகமாக கல்வியமைச்சினால் 30.07.2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாள்களைப் பாடசாலைகளை நடத்துமாறு கேட்கப்பட்டிருக்கிறது.

அதன்பிரகாரம் மேற்படி திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாள்களுக்குப் பாடசாலைகள் நடைபெறுமென்றும். ஏனைய புதன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் நிகழ்நிலை (சூம்) தொழிநுட்பம் வாயிலாகவோ அல்லது விடுமுறைக்காலத்திற்கான கற்றற்செயற்பாட்டினை வழங்கியோ வீட்டில் இருந்த வண்ணம் தொழிற்படலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிபர்கள் வாரத்தின் 5 தினங்களும் பாடசாலை நடாத்துவதாயின், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தைப் பெற்று அதன்பின் வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பாடசாலையை நடத்தலாமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதனைக் கருத்திற் கொள்ளாது, வலயக்கல்விப் பணிப்பாளரின்  அனுமதியினையும் பெறாது, கிழக்கு மாகாணத்தின் சில பாடசாலைகள் வாரத்தில் 5 நாள்களும் நடாத்தப்படுவதாக எமது சங்கத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, இது குறித்து, கல்வியமைச்சிடம் முறையிடத் தீர்மானித்துள்ளோம்.

காலத்தின் தேவை கருதி எடுக்கப்பட்ட கல்வியமைச்சின் தீர்மானத்தை மீறிச் செயற்படுவது கண்டனத்திற்குரியது என கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது.



SHARE

Author: verified_user

0 Comments: