18 Jun 2022

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் பூ.பிரசாந்தன்.

SHARE

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்   பூ.பிரசாந்தன்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு அக மற்றும் புற காரணங்கள் பல கூறப்பட்டாலும் வளங்கள் முறையாக முகாமை செய்யப்பட வேண்டிய கட்டாய தேவையும் இங்கு மேலோங்கிக் காணப்படுகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச  கிராமிய குழு உறுப்பினர்களுடனான விசேட மாதாந்த கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை(16) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

மக்கள் தமக்கான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வது அறிக்கைகள் விடுவதற்காகவும் நாடாளுமன்ற கதிரைகளை சூடாக்கி தமது தனிப்பட்ட சுய லாபத்திற்காக ஏனைய அரசியல் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் திட்டித் தீர்ப்பதற்காகவுமல்ல, தமக்கான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதற்கு முகம் கொடுத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே மக்கள் வாக்களிக்கிறார்கள்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியினை எவரும்  இன்னொருவர் மீது சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது.  நாடாளுமன்றத்தில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்று நாட்டின் ஜனாதிபதியும் இதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

அதேபோன்று நாட்டின்  அரச இயந்திரத்தினை அமுல்படுத்துகின்ற அதிகாரிகளின் நெறிப்படுத்தலும் அத்தியாவசியமானது.     உணவுப்பாதுகாப்பு விசேட திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற தரிசாக கிடைக்கின்ற அனைத்து அரச காணிகளிலும் பயிர் செய்வதற்கும் தானியங்களை வளர்ப்பதற்கும் கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கும் இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள் அவர்களுக்கான காணிகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய தேளையுள்ளது.

அதேபோன்று பொருளாதாரத் தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதனால் அல்லது அறிக்கைகளை வாசித்துக் கொண்டு இருப்பதனால் சாதாரண கூலி தொழிலாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கப்போவதில்லை. நாட்டில் இடம்பெற்ற யுத்த்தினால் எமது  மாவட்டத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு சென்றிருந்தன, அதேபோன்று யுத்தத்தினால் விசேட தேவையுடையவர்களும், கூலித் தொழிலாளிகளும் அதிகமாக காணப்படுகின்றார்கள். அவர்களின் வறுமையை போக்குவதற்கு இவர்களின் நாளாந்த வாழ்வாதாரத்திற்கான நிவாரணங்களை வழங்கவேண்டிய நிலையுள்ளது. இளைஞர் யுவதிகளும் தங்களது ஓய்வு நேரங்களில் வீட்டு தோட்டத்திலும் பயிர்ச்செய்கையிலும்  ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின்  ஏற்ப்பாட்டில் ஒவ்வொரு பிரதேசங்களிலும்   பயிர்ச்செய்கையில்  ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உணர்ந்து கட்சியின் ஒவ்வொரு போராளிகளும் இவ்வாறான பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திதழ வேண்டும் எனவும் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு  அனைத்து பிரதேச குழு தலைவர்களும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: