24 Sept 2021

சுயமாகத் தோன்றிய அம்பாள் சிலை! பாதுகாத்து ஆலயம் அமைத்து வழிபடும் எல்லைப்புறக்கிராம மக்கள்.

SHARE

சுயமாகத் தோன்றிய அம்பாள் சிலை! பாதுகாத்து ஆலயம் அமைத்து வழிபடும் எல்லைப்புறக்கிராம மக்கள்.

1987 ஆம் ஆண்டு சுயமாகத் தோன்றிய அம்பாள் சிலையை இதுவரைப் பாதுகாத்து வைத்திருந்த மக்கள் அதனை சுயமாக தோன்றி இடத்திலேயே வைத்து வழிபாடு செய்வதற்கு திடகங்கற்பம் பூண்டு அதனை நிறைவேற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் எல்லைப் புறக்கிராமமாக மாலையர்கட்டு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அக்கிராமத்தைச் சேர்ந்த முதியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்…. நான் குருமண்வெளிக் கிராமத்திலிருந்து போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் மாலையர்கட்டு எனும் கிராமத்திற்குக் 1966 ஆம் ஆண்டு குடியேறினேன். அப்போது இந்த இடத்தில் ஒரு ஆலமரம் நின்றது. அதன்கீழ் பிள்ளையார் சிலை ஒன்றும் இருந்தது. அதற்கு  நான்தான் பூ வைத்து வணங்கி வந்தேன். பின்னர் 1987 ஆம் ஆண்டு வழக்கப்போல் பிள்ளையாருக்குப் பூ வைப்பதற்காகச் சென்றவேளை அருகில் அம்பாள் சிலை ஒன்றும் இருந்தது. அது எவ்வாறு வந்தது என தெரியாது. இது பற்றி கிராமமக்களிடமும் தெரிவித்தேன் யாரும் அங்கு கொண்டு அம்பாள் சிலையை வைக்கவில்லை அனைவரும் வந்து வணங்கிச் செல்வார்கள். சுயமாக தோன்றிய அம்பாளுக்கு சிறிய ஆலயம் அமைக்குமாறு அப்போதே மக்களிடம் தெரிவித்தேன் பின்னர் தென்னை ஓலையால் சிறிய ஆலயம் அமைத்து அம்பாளுக்கு 2 வருடம் பூஜை செய்து வழிபாடு செய்து வந்தோம்.

பின்னர் 1990 ஆம் ஆண்டு சிறியளவில் கல்லால் ஆலயம் அமைத்து அம்பாளை வழிபடுவதற்கு முற்பட்டவேளை யுத்தம் உக்கிரமடைந்ததனால் அனைத்தையும் விட்டுவிட்டு அம்பாள் சிலையை மாத்திரம் ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு இடம்பெயர்ந்து விட்டோம்.

அப்போது யுத்த காலம் ஆகையால் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் அம்பாள் சிலையை பெட்டியுடன் பல வீடுகளிலும், ஆலயங்களிலுமாக மாறி மாறி வைத்து பாதுகாத்தேன். அம்பாள் எனக்கு கனவில் அடிக்கடி வருவார், இதனை நினைத்து எனக்கு நித்திரை வருவதுமில்லை, தற்போது அம்பாள் தோன்றி அதேஇடத்தை ஊர்மக்களின் சிறிய சிறிய நிதிப் பங்களிப்புடனும், நான் வைத்திருந்த 45000 ரூபாவையும் கொடுத்து, துப்பரவு செய்து மீண்டும் வைத்து வழிபட ஏற்பாடு செய்துள்ளோம். சுயமாக தோன்றிய அம்பாளை யுத்த காலமிருந்து பாதுகாத்து தற்போது அதேஇடத்தில் வைத்து வழிபடுவதற்கு தற்போது அம்பாள் அருள் புரிந்தமை எனக்கு ஆத்ம திருப்தியளிக்கின்றது, எனினும் இதனை நிரந்தர ஆலயமாக நிருமாணித்து வழிபடுவதற்கு ஏனையோரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என தெரிவிக்கின்றார் மாலையர்கட்டு கிராமத்தைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவரான முத்துப்பிள்ளை நல்லதம்பி.

இவ்வாறு பாதுகாத்து வந்த அம்பாள் சிலையை திங்கட்கிழமை (22) அதே இடத்தில் பிரதிஸ்டை செய்து அன்றிலிருந்து மீண்டும் வழிபாடு செய்து வருகின்றனர் அக்கிராமமக்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறக் கிராமங்களில் ஆங்காங்கே நில ஆக்கிரமிப்புக்களும், காணி அபகரிப்புக்களும் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துவரும் இந்நிலையில் மக்களின் இருப்புக்களையும், பாதுகாப்பதற்காகவும், தக்க வைப்பதற்காக வேண்டியும் தமிழர்கள் ஆங்காங்கே பண்டைய காலமிருந்து பாதுகாத்து வந்த வழிபாட்டுத் தலங்களை மீளுருவாக்கம் செய்து வழிபடவும், அதன் புத்துயிரூட்டும் செயற்பாடுகளுக்கு தனவந்தர்களும். புலம் பெயர் அமைப்புக்களும், தமிழர்களின் எல்லைப்புறங்களைப் பாதுகாக்க வேண்டும், என கோசமிடுபவர்களும், அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மவாட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.












SHARE

Author: verified_user

0 Comments: