5 Aug 2020

மட்டக்களப்பில் சுமுகமான முறையில் வாக்களிப்பு.மட்டக்களப்பில் சுமுகமான முறையில் வாக்களிப்பு.

SHARE


மட்டக்களப்பில் சுமுகமான முறையில் வாக்களிப்பு.இலங்கையின் 9 வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கள் திட்டமிட்டபடி புதன்கிழமை (05) காலை 7.00 மணிமுதல் மிகவும் சுமுகமான முறையில்  இடம்பெற்று வருகின்றது.  அந்த வகையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள், உள்ளிட்ட பலரும் அவரவர் ஆதரவாளர்களுடன் வருகைதந்து வாக்களிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

வழமைக்கு மாறாக இம்முறை கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப்பேணி இத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. 
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள், பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பெவ்ரல், மற்றும் கபே போன்ற அமைப்புக்களும், பொலிஸ், இராணுவத்தினரதும் விசேட கண்காணிப்புக்களும், இடம்பெற்று வருவதையும், அவதானிகக் முடிகின்றது. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் இருந்து 1 இலட்சத்தி 92 ஆயிரத்தி 809 வாக்காளர்களும், கல்குடாத் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்தி 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 97 ஆயிரத்தி 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் 12 ஆயிரத்தி 815 அஞ்சல் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 97 சதவீதமான அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றிருந்தது.

இப்பொதுத்தேர்லில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள் போட்டியிடுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதக்காக வேண்டி இம்முறை 304 பேர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்கள் இந்துக்கல்லூரியிலும், 33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகள் வன்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரையில் 269 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதியாரியும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.  



















SHARE

Author: verified_user

0 Comments: