15 Dec 2019

சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான வைத்தியசாலை நிருவாகத்தின் கீழ் வரும் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

SHARE
சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான வைத்தியசாலை நிருவாகத்தின் கீழ் வரும் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கவனக் குறைவால் சிறுமி ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்த அவர்,

நான் அறிந்தவரையில் மருந்தின் அளவு 2 மில்லி லீற்றர் ஏற்றப்படுவதற்கு பதிலாக 20 மில்லி லீற்றர் ஏற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியர் அதனை குறித்த விதமும், மருந்தினை ஏற்றியவரின் கவனக் குறைவும் உயிரிழப்புக்கான காரணமாக அமைத்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

மனித உயிரானது மிகவும் பெறுமதியானது, அதனைப் பாதுகாப்பது கட்டாயமானது.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது,

சம்பந்தப்பட்ட  வைத்தியரும் சட்டத்தரணி வாயிலாக நீதிமன்றில் ஆஜராகி இருப்பதாக அறிய முடிகிறது.

தவறு செய்பவர்கள் அவர்கள் மருத்துவராக இருந்தாலும் சரி, அரசியல் வாதியாக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

வைத்தியசாலைப் பணிப்பாளர் ஊடக சந்திப்பினை மேற்கொண்டதை நானும் அவதானித்தேன், இது தொடர்பான முறைப்பாடு சுகாதார அமைச்சிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, நானும் தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவிய போது அந்த தகவல்களைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.

இந்த உயிரிழப்பு வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

வைத்தியரின் தவறு காரணமாகத்தான் மாணவி கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது வெளியாகியுள்ளது.

பல தடவைகள் இவ்வாறான செயற்பாடுகள் வைத்தியர், தாதியர்கள் கவனக் குறைவு காரணமாக இடம்பெற்றிருக்கின்றது,

இம்முறை அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சுக்களிடம் நாம் முறைப்பாடு செய்வோம்” என அவர் மேலும்  தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: