11 Aug 2019

இலங்கை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே. குணநாதனுக்கு இந்தியாவில் பாரதி விருது.

SHARE
இலங்கை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே. குணநாதனுக்கு இந்தியாவில் பாரதி விருது.
தமிழ்நாடு பாரதி தமிழ் இலக்கியப் பேரவை 40 ஆண்டுகளாக இந்திய சுதந்திர தினத்தன்று பல்வேறு தேசிய நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றது.

இவ்வாண்டும் வழமை போல் எதிவரும்,  14 ஆம் 15 ஆம் திகதிகளில் தேனி மாவட்டம் கம்பம் காந்திஜி பூங்காத்திடலிலும், தாத்தப்பன் மண்டபத்திலும் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்த ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளன.

இவ்வாண்டுக்கான நிகழ்வு 73வது விடுதலை நாள் விழா, பேரவையின் 40 வது ஆண்டு விழா, காந்தியடிகளின் 150 வது ஆண்டு விழா, நேதாஜியின் சுதந்திர அரசின் 75 வது ஆண்டு விழா என சிறப்பு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

கவியரங்கம், பரதநாட்டிய அரங்கம், இலக்கியப் பட்டிமன்றம், தமிழ்க் கவிஞர்களான பாரதியார், திருவள்ளுவர், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர் ஆகியோரின் சிலை திறப்பு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் படத் திறப்பு, இலவச ஆடைகள் விநியோகம், சாதனையாளர் விருது என நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த உலகத் தமிழிலக்கிய நான்கு நூல்களுக்கு ஒரு லெட்சம் ரூபா பணப்பரிசுடன் பாரதி தமிழ் இலக்கிய விருது வழங்கிக் கௌரவிக்கப்படவிருக்கிறது.

குடையும் மரநிழலும் என்ற அறிவியல் நாவலுக்காக இலங்கை டாக்டர் ஓ.கே. குணநாதன், தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை என்ற சிறுகதைத் தொகுப்புக்காக திருநெல்வேலி வே. முத்துக்குமார், தமிழ் அறிஞர்கள் என்ற கட்டுரை நூலுக்காக சென்னை ஜனனி ரமேஷ், ஆதலினால் புத்தகம் படிப்போம் என்ற ஆன்மீக நூலுக்காக கோவை பே.சா.கர்ணசேகரன் ஆகியோர் இந்த விருது பெறுநர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விருதாளிகளுக்கு சுப்பிரமணிய பாரதியார் தலைப்பாகை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மேடையில் தமிழ் முரசு ஒலிக்க விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

40 வருட வரலாற்றில் இலங்கையர் ஒருவர் இவ்விருதினைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: