(ஜதுர்சயன்)
சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நமது அரசியலவாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வரப் போகின்ற தேர்தல்கள் தொடர்பாக வியாழக்கிழமை 18.04.2019 அவர் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,
இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.
ஏமாற்று அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தமது ஏமாற்று அரசியலைச் செய்து பிழைப்பு நடாத்த முடியாது.
அரசியலில் 25, 30 வருடங்களாக இருந்து வருகின்றோம் என்று பிதற்றித் திரிகின்ற அரசியல்வாதிகள் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை எதிர்வருகின்ற அரசியல் களம் நன்கு உணர்த்தும்.
சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்களுக்குத் துரோகத்தையே செய்து வந்திருக்கின்றார்கள்.
ஒரு புறம் இனவாதம், மறுபுறம் சுயநலம் இந்த இரண்டு வகையான அரசியல் துரோகத்தனங்களில் முஸ்லிம் சமூகம் சிக்கியுள்ளது.
எந்தத் தேர்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் வரலாம் என்கின்ற தளம்பல் நிலையில்தான் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.
அது மாகாண சபைத் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம்.
சிறுபான்மை சமூகத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய கலப்பு முறையிலமைந்த மாகாண சபைத் தேர்தலை தடுத்து நிறுத்தி விகிதாசார முறையிலே அது நடாத்தப்பட வேண்டும்.
இதனை இடித்துரைத்துச் சொல்லி, அதில் மாற்றம் செய்விக்க எந்த சிறுபான்மைச் சமூக அரசியல்வாதிக்கும் வக்கில்லாமல் போய்விட்டது. இது வருந்தத் தக்கது.
இந்த இலட்சணத்தில் இவர்கள் கால்நூற்றாண்டு அல்லது அதற்கும் கூடுதலாக அரசியல் அனுபவம் பெற்றிருக்கின்றோம் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.
குரல் கூடக் கொடுக்க முடியாத அரசியல் வங்குரோத்தில்தான் முஸ்லிம் சமூக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே, பாதிக்கப்படும் சமூகத்துக்காக உரிய இடங்களில் குரல் கூடக் கொடுக்க முடியாத அரசியல் தலைமைகளால் எப்படி வீதியில் இறங்கி உரிமைக்காகப் போராட முடியும்?
மாகாண சபைத் தேர்தல் இல்லாமல், அங்கு மக்களாட்சி இல்லாமல் இருக்கின்ற விடயம் இப்பொழுது சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பாரிய பாதிப்பாக இருந்தும் அதுபற்றி வாயே திறக்காத அரசியல் தலைமைகளை சமூகக் காவலர்கள் என்று எப்படி நம்பிக் கொண்டிருக்க முடியும்?
மாகாண சபைகள் இயங்காததால் அங்கு அபிவிருத்திகளோ முன்னேற்றங்களோ இல்லாத நிலையில் ஸ்தம்பித்து போன மாகாணங்களாவே அவை நகர்ந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் சமூக அரசியல் ஒரு சிறு விடயத்தைக் கூட நாடாளுமன்றத்திலே சாதிக்க முடியாத நிலைமையை எண்ணி வருத்தப்பட வேண்டியுள்ளதோடு இதனை மாற்றியமைக்க வேண்டியது பற்றி சமூகம் விரைவாகச் சிந்திக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உத்தரவாதம், உரிமைகள், பாதுகாப்பு, இருப்பு என்பன கேள்விக் குறியாகிவிடும்” என்றார்.
0 Comments:
Post a Comment