27 Mar 2019

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்படாதவரை என்றுமே உய்வில்லை முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

SHARE


இந்நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்படாதவரை காலாகாலமாக அனுபவித்து வரும் தீவினையிலிருந்து ஒருபோதும் மீட்பெறுவதற்கான உய்வில்லை என உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
எறாவூரில் ஞாயிற்றுக்கிழமை 24.03.2019 இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமான நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிழக்கு மாகாண முன்னாள்  சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான எம்.எஸ். சுபைரின் ஏற்பாட்டில்  இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்நிகழ்வுகளில் பங்கு கொண்டு மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,

இன அடிப்படையில், பௌதீக வளங்களை மாத்திரம் ஏட்டிக்குப் போட்டியாக வழங்கிவிட்டால் நாம் உயர்வடைந்து மீட்சி பெற்றுவிட்டோம் என்று நினைத்து விடக்; கூடாது, ஆனால் இனவாத அரசில்வாதிகள் அப்படித்தான் நினைத்துக் கொண்டு செயலாற்றுகின்றார்கள்.

இது முற்றிலும் ஒரு ஏமாற்றாகும். பௌதீக வளங்களை வாரி வழங்குவதனால் நாம் ஒரு போதும் தீவினையிலிருந்து நீங்கி மீட்சி பெற்றுவிட முடியாது.

அதற்குப் பதிலாக மனித மனங்கள் ஒன்றிணைய வேண்டும். அதிலும் குறிப்பாக நாட்டிலுள்ள சிறுபான்மையினராகிய தமிழர்களும் முஸ்லிம்களும் முதலில் வடக்கு கிழக்கில் ஒன்றிணைய வேண்டும்.

தமிம் முஸ்லிம் மக்களுக்கிடையிலே நல்லிணக்கம் ஏற்படாத வரையில் மிக மோசமானதொரு சமூக நிலை இருந்து கொண்டுதானிருக்கும். இது எல்லாவகையான சுமுக நிலைக்கும் குந்தகமாக அமையும்.

அதன் அடிப்படையாக நாம் முதலில் மொழியால் இணைவோம். தமிழால் இணைவோம், தலையால் கலப்போம், என்ற அடிப்படையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக சமூக இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்துச் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான உய்வுக்கான வழிகள் ஏற்படுத்தப்படாதவிடத்து வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்கள் உய்வில்லாதவர்களாக விடுதலையின்றிய அடிமைச் சமூகங்களாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

ஆகவே நல்லிணக்கத்திற்கும் இணைவுக்கும் பாலமாக கிழக்கு மாகாணத்தின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த புதிய ஆளுநர் இருக்க வேண்டும் என்று நாங்கள் அவாக் கொள்கின்றோம்.

அவர் நியமிக்;கப்பட்டபோது பெரிய சலசலப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புக்கள் தலைதூக்கின.

அத்தனை சவால்களையும் தாண்டி செயலால் ஒற்றுமையை சாதித்துக் காட்டுகின்ற மொழியால் இணைவோம் என்ற ஒற்றுமை மந்திரத்தை உச்சாடனம் செய்து உய்வடைய நான் இரு சமூகங்களுக்கும்  அறைகூவல் விடுக்கின்றேன்” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: